நாயுடன் நடைபயிற்சி செய்ய மைதானத்தை காலி செய்த ஐஏஎஸ் தம்பதி அதிரடி டிரான்ஸ்பர் – உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

நாயுடன் நடைபயிற்சி செய்ய ஒட்டுமொத்த மைதானத்தையும் தினம் காலி செய்ய வைத்த ஐஏஎஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி இருவரையும் மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி டிரான்ஸ்பர் செய்துள்ளது.

ஐஏஎஸ் அலுவலர் சஞ்சீவ் கிர்வாரை லாடக்கிற்கும், அவரது மனைவியை அருணாசலப் பிரதேசத்திற்கும் உடனடியாக இடமாற்றம் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மைதானத்தை பயன்படுத்துவதில் அதிகார துஷ்பிரயோகம் செய்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிட வேண்டும் என டெல்லி தலைமை செயலாளரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து மைதானங்களையும் இரவு பத்து மணி வரை வீரர்களின் பயிற்சிக்காக திறந்து வைத்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டெல்லியின் வருவாய் பிரிவு முதன்மை செயலாளராக இருப்பவர் ஐஏஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் கிர்வார். இவர் டெல்லியில் உள்ள தியாகராஜா விளையாட்டு மைதானத்தில் மாலை 7.30 மணி அளவில் தனது மனைவி மற்றும் வளர்ப்பு நாயுடன் தினமும் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தாங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மைதானத்தில் பயிற்சி செய்யும் விளையாட்டு வீரர்கள் அங்கிருந்து மாலை 6.30 மணிக்கெல்லாம் காலி செய்து வெளியேற வேண்டும் எனவும், அதன் பின்னர் மைதான ஊழியர்கள் மைதானத்தை சுத்தமாக்கி வைக்க வேண்டும் என உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதன்படி கடந்த ஒரு வார காலமாக வீரர்கள் மாலை 6.30க்கு எல்லாம் வெளியேற்றப்பட்டு, ஐஏஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் தனது மனைவி மற்றும் நாயுடன் வாக்கிங் போக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புகைப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியானது. ஐஏஎஸ் அதிகாரியின் இந்த அதிகார அத்துமீறலுக்கு பல தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்தன. இதையடுத்து தம்பதி இருவர் மீதும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.