தனியார் வகுப்பு சென்ற சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு வவுனியாவில் பதற்றம்.

வவுனியாவில் தனியார் வகுப்புக்குச் சென்ற சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தாய், தந்தையை இழந்த 16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என்ற சிறுமி மாமாவின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த நிலையில் நேற்று மதியம் தனியார் கல்வி நிலையம் சென்று மாலை 5.30 வரை வீடு திரும்பவில்லை.

இதையடுத்து சிறுமியைத் தேடிய உறவினர்கள் அவரைக் கண்டுபிடிக்க முடியாமையால் நெளுக்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.

முறைப்பாட்டுக்கு அமைவாக நெளுக்குளம் பொலிஸார் உறவினர்கள் மற்றும் அயலவர்கள் துணையுடன் குறித்த சிறுமியைத் தேடும் நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதன்போது அப்பகுதியில் உள்ள மக்கள் நடமாட்டம் அற்ற பகுதியிலுள்ள கிணற்றில் இரவு 7.30 மணியளவில் சிறுமி சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.

உறவினர்களால் நெளுக்குளம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தடவியல் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து அப்பகுதியில் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

கிணற்றிலிருந்து 50 மீற்றர் தூரத்திலுள்ள மரத்தின் கீழ்ப் பகுதியில் சிறுமியின் காலணி மற்றும் புத்தகங்கள் மீட்கப்பட்டதுடன் மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மோப்ப நாய் கிணறு அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீற்றர் தூரத்திலுள்ள காணியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் தஞ்சம் அடைந்திருந்தது. குறித்த பாவனையற்ற வர்த்தக நிலையத்தில் மதுபானப் போத்தல்கள் மற்றும் கயிறும் காணப்பட்டது.

அதன்பின்னர் குறித்த வர்த்தக நிலையத்தின் வீட்டாரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

இரவு 11.45 மணியளவில் கிணற்றில் காணப்பட்ட சிறுமியின் சடலத்தை மீட்டெடுக்கும் பணியில் தடவியல் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டனர். அவர்கள் பொதுமக்களின் உதவியுடன் சிறுமியின் சடலத்தை கிணற்றிலிருந்து மேலே எடுத்து வந்தனர்.

குறித்த பகுதியில் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டமையால் அவ்விடத்தில் சற்றுப் பதற்ற நிலைமை காணப்பட்டது.

சடலம் பிரதே பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் மரண விசாரணைகளின் பின்னரே மரணத்துக்கான காரணம் தொடர்பில் தெரிவிக்க முடியும் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாருடன் இணைந்து தடவியல் பொலிஸர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.