இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டால் பொருளாதாரப் பிரச்சினையும் தீரும்! சம்பந்தன் திட்டவட்டமாகத் தெரிவிப்பு.

தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதன் மூலமே பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை நோக்கி நகர முடியும் என்று திட்டவட்டமாகவும் தெளிவாகவும் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.

கொழும்பு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“நாட்டினுடைய பொருளாதார நெருக்கடி சமீபகாலத்தில் ஆரம்பித்தது அல்ல. இந்த நெருக்கடி நீண்ட காலம் இருந்து வந்திருக்கின்றது. இதற்கு முக்கியமான காரணம் தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு ஒரு நியாயமான, நீதியான, நிரந்தரமான தீர்வு காணப்படவில்லை என்பதுதான்.

அதன் விளைவாக ஓர் ஆயுதப் போராட்டம் 30 வருடங்களாக நடைபெற்றது. அந்தப் போராட்டத்தை நடத்துவதற்காக அரசு பெருமளவு நிதியைச் செலவிட வேண்டியிருந்தது. அதற்காக வெளிநாடுகளிடம் இருந்து பெருமளவு கடன் பெற வேண்டிய தேவை எழுந்தது.

அதேசமயம் இந்த நாட்டின் மீது வெளிநாடுகள் நம்பிக்கை வைக்கவில்லை. அவர்கள் இங்கு முதலீடு செய்ய முன்வரவில்லை. தங்கள் சொந்த நாட்டினுடைய பிரச்சினையைத் தீர்க்காமல் போரை நடத்துகின்ற ஒரு நாடு மீது எவ்வாறு ஏனைய நாடுகள் நம்பிக்கை வைக்கும்?

அத்தகைய நாட்டில் முதலீடு செய்தால் தாங்கள் கடைசியில் நட்டம் அடைய வேண்டும் என்ற கருத்துப் பிற நாடுகளில் இருந்தது.

இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் 30 வருடங்களாக நடைபெற்ற போர்தான்.

மேலும், இலஞ்சம், ஊழல், குளறுபடிகள் இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்துள்ளன.

அரசுனுடைய நிர்வாகத்தைச் சரியான, உரிய, தகுதியானவர்கள் நடத்தவில்லை. குடும்ப ஆட்சி, கட்சிக்காரர்கள் நியமனம் என்று அரச நிர்வாகமே குளறுபடியாகவே நடைபெற்றுள்ளது.

இப்படியான காரணங்களின் நிமிர்த்தம்தான் நாட்டில் இத்தகைய மோசமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

நெருக்கடியைத் தீர்ப்பதற்கு முயற்சி எடுக்கின்றார்கள் எனக் கூறுகிறார்கள். இந்தநெருக்கடியைத் தீர்ப்பது கஷ்டம். நெருக்கடியைத் தீர்ப்பதற்கு முன்னர் நாட்டிலுள்ள பிழைகள், குற்றங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். வெளிநாட்டு அமைப்புகள் இலங்கை மீது நம்பிக்கை வைக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். திறமையானவர்கள், நிபுணர்கள் இங்கு விடயங்களைக் கையாளக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும்.

நாடுகள் உதவி செய்தால், அந்த உதவிகள் மூலம் இலங்கையில் ஒரு முன்னேற்றத்தைக் காண அவர்கள் விரும்புவார்கள். அவ்விதமான உதவிகள் செய்து, அவ்விதமான முன்னேற்றங்களைக் காணக்கூடிய நிலைமை இன்று நாட்டில் இல்லை. இன்றும் வெளிநாட்டவர்கள் இலங்கையை ஒரு சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கின்றார்கள்.

ஆகவே இவர்கள் முதலில் தங்களுடைய நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். ஊழல், இலஞ்சம், நெருங்கியவர்கள் – கட்சிக்காரர்களுக்கு இடம் அளித்தல் போன்றவற்றைத் தவிர்த்து நேர்மையான நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

தேசிய பிரச்சினைக்கு நியாயமான ஒரு தீர்வைக் காண வேண்டும். ஒருமித்த நாட்டுக்குள் அதிகப்படியான அதிகாரப்
பரவலாக்கலுடன் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக, நீண்டகாலமாக, தாங்கள் வாழ்ந்த இடங்களில் தங்களைத் தாங்களே நிர்வகிக்கக் கூடிய ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தித் தீர்வுகாண வேண்டும்.

இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்தால்தான் இப்போதைய பொருளாதார நெருக்கடிப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.