பௌத்தத்தின் தோற்றுவாய் இந்துவே! – வீரசேகரவுக்கு சித்தார்த்தன் பதிலடி.

“அநுராதபுரத்தில் திராவிட முறையில் கட்டப்பட்ட 20 இற்கும் மேற்பட்ட சைவ ஆலயங்களின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பொலநறுவையில் 12 சைவக்கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த ஆலயங்கள் தேசிய மரபுரிமை சின்னங்களாகக் கருத்தப்பட்டனவே தவிர அவை மீளுருவாக்கம் செய்யப்படவில்லை. அப்படி இருக்கும்போது குருந்தூர்மலையில் மட்டும் புத்தர் சிலையை நிறுவி பௌத்தத்தை மீளுருவாக்கம் செய்ய முற்படுவது சிங்களக் குடியேற்றத்துக்கான கால்கோள் ஆகும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சுகாதார நெருக்கடிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் தெரிவிக்கையில்,

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகர தமிழ் மக்களை எச்சரிக்கும் வகையில் பௌத்த சிங்கள மக்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு. அதனை அவர்கள் தாண்டி விடுவார்கள் என்ற அர்த்தத்தில் பேசியிருந்தார். அவர் பேசிய விடயம் குருந்தூர்மலையில் நீதிமன்ற உத்தரவை மீறி புத்தர் சிலை ஒன்றை நிறுவ முயற்சித்தபோது அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், எஸ். வினோநோகராதலிங்கம், முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் சிவநேசன் ஆகியோரின் தலைமையில் அதனைத் தடுப்பதற்காக ஒரு பெரும் போராட்டம் நடத்தப்பட்டு புத்தர் சிலை நிறுவும் முயற்சி தடுக்கப்பட்டது.

சரத் வீரசேகரவின் பேச்சு மீண்டும் மீண்டும் மிக ஆக்ரோஷமாக இருந்தது. இப்படியான பேச்சுக்கள்தான் கடந்த காலங்களில் இன முறுகலை உருவாக்கி மிகப்பெரிய போரைக்கொண்டு வந்து இன்றைய இந்தப் பொருளாதாரச் சிக்கல், இலங்கையின் வங்குரோத்து நிலைக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்திருந்தது என்பது அவருக்குத் தெரியாமல் உள்ளது. இந்த நிலைமையில் மீண்டும் மீண்டும் மத, இன முரண்பாடுகளைத் தூண்டி நாட்டில் மேலும் மேலும் அழிவுகளுக்கு இட்டுச் செல்லவே இத்தகைய நடவடிக்கைகள் வழிவகுக்கும்.

பௌத்த – சிங்கள மக்களே வாழ்ந்திராத ஒரு பிரதேசத்தில் பௌத்தம் சார்ந்த வழிபாடுகள் கடைப்பிடிக்கப்படுமானால், பௌத்தம் சம்பந்தமான விடயங்கள் கண்டுபிடிக்கப்படுமானால் அதனை அதை ஒரு மரபுரிமை சின்னமாகப் பாதுகாப்பதே நியாயமானது. அதனை விடுத்து பழைய பண்பாட்டுக்குரிய சின்னங்களை மீள உருவாக்கம் செய்து வழிபாட்டுக்குரிய இடங்களாக மாற்றுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. தொல்லியல் சட்டங்களையோ அல்லது நடைமுறைகளையோ பின்பற்றாது இவ்வாறு வழிபாட்டுத் தலங்களை உருவாக்குவது அங்கு திட்டமிட்ட பௌத்த – சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கான கால்கோளாகும்.

இது இனங்களிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவித்து நாட்டை அழிவுகளுக்கு இட்டுச் செல்லுமே தவிர நாட்டை முன்னேற்றவோ ஐக்கியத்தைக் கட்டியெழுப்பவோமாட்டாது. இதனை நாம் அனைவரும் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும்.

அநுராதபுரத்தில் திராவிட முறையில் கட்டப்பட்ட 20 இற்கும் மேற்பட்ட சைவ ஆலயங்களின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த ஆலயங்கள் தேசிய மரபுரிமை சின்னங்களாகக் கருத்தப்பட்டனவே தவிர அவை மீளுருவாக்கம் செய்யப்படவில்லை. அங்கு மீண்டும் சைவக் கோவில்கள் உருவாக்கப்படவில்லை.

பொலநறுவையில் 12 சைவக்கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவைகூட புதுப்பிக்கப்படவில்லை. அவை தென்னிந்திய மகாஜான பௌத்த கலை மரபுக்குரியவை.

இலங்கையின் மூத்த தொல்லியல் அறிஞர்களான பேராசிரியர்கள் பரணவிதான, நந்தா விஜேசேகர, சேனக பண்டார போன்றவர்கள் இலங்கையில் காணப்படும் பௌத்த கட்டடக்கலை மரபுகள் தென்னிந்தியாவுக்குரியவை எனச் சந்தேகத்துக்கிடமின்றி குறிப்பிட்டுள்ளனர்.

பாலி சிங்கள இலக்கியங்களில் கூட குருந்தூர்மலை குருந்தளூர் எனக் குறிப்பிடப்பட்டு அது தமிழ் மக்கள் சார்ந்த இடம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையைக் காணலாம். 1815 இல் அங்கு அரச அதிகாரியாக இருந்த ஆங்கிலேயரான லூயிஸ் என்பவர் கூட குருந்தூரில் இந்து ஆலய இடிபாடுகளை நந்தியுடன் கண்டதாகக் கூறியுள்ளார்.

எனவே, மத அடையாளமானது இனத்தின் அடையாளமாகாது. பௌத்த மதத்தின் தோற்றுவாய் இந்துசமயம்தான்.

இலங்கையில் பௌத்தம் ஆரம்பத்தில் தமிழர்களினாலேயே பின்பற்றப்பட்டது. ஆரம்பத்தில் பௌத்த மதத்தைப் பின்பற்றியவர்கள் தமிழர்கள். பின்பு அது மாறியதற்குக் காரணம் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு ஏற்பட்ட சிங்கள – பௌத்தம் என்ற நிலைப்பாடுதான் பிரச்சினைகளை ஏற்படுத்தியது. உலகமெங்கும் பௌத்தம் உள்ளது. அங்கெல்லாம் அது மொழியுடன் சேர்த்து பேசப்படுவதில்லை. எந்த மதத்துக்கும் நாம் மாறானவர்கள் அல்ல. அதற்கு எனது பெயரே சான்று பகரும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.