இந்த அரசை நம்பியிருக்காது நாங்களாவே செயற்படுவோம் – மக்களிடம் ரட்ணஜீவன் கூல் வலியுறுத்து.

“பொதுமக்கள் இனியும் அரசில் தங்கியிருக்காது – இந்த அரசை நம்பியிருக்காது சுதந்திரமாகச் செயற்பட முன்வர வேண்டும்.”

– இவ்வாறு இளைப்பாறிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரும் பேராசிரியருமான ரட்ணஜீவன் கூல் தெரிவித்தார்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடி தலைதூக்கியுள்ளது. இதன் காரணமாக அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைத்தையும் அரசிடமிருந்து எதிர்பார்க்காது – அரசை இனியும் நம்பியிருக்காது வெளியில் சுதந்திரமாக எமது அன்றாடச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்

குறிப்பாக மின்சாரத்தை எதிர்பார்க்காது கிணற்றில் வாளியில் அள்ளிக் குளிக்க வேண்டும். அதேபோல் எரிபொருளை எதிர்பார்க்காது நாங்கள் முன்னர் ஒரு காலத்தில் எவ்வாறு பயணம் செய்தோமோ அதேபோல் சைக்கிள்களைப் பாவித்து எமது பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், இதைவிடுத்து இன்றும் அரசை எதிர்பார்த்திருக்கின்றோம்; அரசை நம்பியிருக்கின்றோம். அவ்வாறான நிலையை இனியும் எதிர்பார்க்க முடியாது.

குறிப்பாகச் சமுர்த்தி என்ற ஒரு விடயத்தைப் பார்ப்போமாக இருந்தால் சமுர்த்தி அனைவருக்கும் வேண்டும் எனக் கோரி வருகின்றோம். சாதாரண குறைந்த வருமானம் உள்ளவர்களுக்குச் சமுர்த்தி வழங்கப்படுகின்றது. ஆனால், ஒரு கடையின் முதலாளியாக உள்ளவர் தனக்கும் சமுர்த்தி வேண்டும் எனக் கேட்கின்றார்.

எனவே, இந்தநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அவ்வாறு மாற்றம் ஏற்படாதவிடத்தில் நாம் இன்னும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை வரும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.