ராஜபக்ச குடும்பம் மறைந்திருப்பது எங்கே? மர்மம் விலகுகிறது

ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ச ஆட்சி, இலங்கை மக்கள் போராட்டத்தின் புதிய மக்கள் இறைமையினால் இறுதியாக கடந்த 2022 ஜூலை 9 ஆம் திகதி கவிழ்க்கப்பட்டது.

ஆனால் இதுவரை கோட்டாபய ராஜபக்ச பதவி விலகவில்லை. இன்று (10) காலை நிலவரப்படி கோத்தபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ஷ. பசில் ராஜபக்ஷ மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் திருகோணமலை கடற்படைத் தளத்தின் ‘நேவி ஹவுஸில்’ பாதுகாப்பாக இருப்பதாக தெரியவருகிறது. நாமல் மட்டும் அங்கு செல்லவில்லை.
VVIP களின் பொருட்கள் ஏற்றப்பட்ட படகுகள்..

நேற்று (09) கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘கஜபாஹு’ மற்றும் ‘சிந்துரல’ எனும் இரண்டு கடற்படைக் கப்பல்களில் VVIP களின் சூட்கேஸ் மற்றும் பொதிகள் ஏற்றப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது. அந்த பொருட்கள் ராஜபக்சேவுக்கு சொந்தமானது என்றும் கூறப்பட்டது.

கஜபாகு கப்பலில் ராஜபக்சேவுக்கு சொந்தமான பெறுமதியான பொருட்கள் ஏற்றப்பட்டது உண்மைதான். சரக்குகளை ஏற்றிய பின்னர் இரண்டு கப்பல்களும் நீண்ட நேரம் இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டிருந்தன. பின்னர், இன்று காலையில்தான் இரு கப்பல்களும் திருகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்துக்குச் சென்றடைந்துள்ளன.
ராஜினாமா செய்ய கோத்தபாவுக்கு ஏன் 4 நாட்கள் தேவை..?

கடந்த 9ஆம் திகதி காலை 11 மணியளவில் கோட்டா பதவி விலகத் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தோம். கோட்டாபய துபாய்க்கு சென்று , அங்கிருந்து  எதிர்வரும் 12ம் தேதி  ராஜினாமாவை அறிவிப்பதாக 8ம் தேதி இரவு அறிவித்திருந்தார்.

ஆனால் சபாநாயகர் நேற்று 9ம் தேதி இரவு , ஜனாதிபதி கோட்டாபய 13ம் தேதி ராஜினாமா செய்வதாக தகவல் கிடைத்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த இரண்டு அறிக்கைகளுக்குள் இருந்த முரண், கோட்டா பதவி விலக 4 நாட்கள் தேவை என்பதை உணர்த்தியது. அது எதற்காக?

ஜனாதிபதி பதவியை விட்டு கோட்டாவால் இலங்கையில் வாழ முடியாது. பழைய வழக்குகள் எல்லாம் மீண்டும் கொண்டு வரப்படும் என்பது அவருக்குத் தெரியும். மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள ராஜபக்ச எதிர்ப்பு அலையோடு கூடிய பலத்த எதிர்ப்பின் மத்தியில் கோட்டாவின் ஜனாதிபதிக்கான பாதுகாப்பு இல்லாமல் போனால் , ​​ஏனைய ராஜபக்சக்களாலும் நாட்டில் இருக்க முடியாது.

கோட்டா அமெரிக்கா செல்லவும் அச்சத்தோடு இருக்கிறார். அங்கு அவர் அமெரிக்க சட்டத்திற்கு பலியாகிவிடுவார் என்று நினைக்கிறார், மேலும் கோட்டாவை வேட்டையாடுவதில் அமெரிக்காவில்  எளிதான துருப்புச் சீட்டு இருப்பதை கோட்டா அறிவார்.

டுபாய் திருடர்களின் சொர்க்கம்.

துபாய் என பலராலும் அறியப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) கோட்டா மற்றும் ராஜபக்சவுக்கு அடைக்கலம் கொடுக்க அந்நாட்டு அரசியல் அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

உலகெங்கிலும் உள்ள ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகள் துபாயிலிருந்து அல்லது அதன் வழியாக செயல்படுவது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

ஆப்கானிஸ்தான் போர்வீரர்கள், ரஷ்ய பாதாள உலகத் தலைவர்கள், தங்கள் நாட்டின் வளங்களைத் திருடுவதற்கு அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திய நைஜீரிய ஆட்சியாளர்கள் (Nigerian kleptocrats), ஐரோப்பிய கருப்புப் பண மோசடி செய்பவர்கள், பொருளாதாரத் தடைகளின் கீழ் ஒப்பந்தங்கள் செய்யும் ஈரானியக் கடத்தல்காரர்கள் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கத் தங்கக் கடத்தல்காரர்கள் போன்ற அனைவரும்  ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) மற்றும் டுபாயை அதன் செயல்பாடுகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக பயன்படுத்துவது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

எனவே துபாயை சொர்க்கமாக மாற்ற ராஜபக்சே கிளெப்டோக்ராட்களை அனுமதித்ததில் ஆச்சரியமில்லை.

ஏனெனில் ஏற்கனவே ராஜபக்ஷவின் கறுப்புப் பணம் முதலீடு செய்யப்பட்ட முக்கிய மையங்களில் ஒன்று டுபாயாகும். துபாயில் உள்ள ராஜபக்சவினரது பிரபலமான மேரியட் ஹோட்டல் சிறந்த உதாரணமாகும்.

அதன்படி கோட்டா தனியாகவோ அல்லது தனது பரிவாரங்களுடனோ துபாய் செல்லலாம்.

இராணுவ உளவுத்துறையின் உளவியல் நடவடிக்கையாக விமான நிலைய நாடகம்

நேற்று (09) கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வி.வி.ஐ.பி பாதுகாப்பு வாகனங்கள் பயணிப்பது மற்றும் விமான நிலையத்தின் ஓடுபாதையை அவர்கள் எவ்வாறு அண்மிக்கிறார்கள் என சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று வெளியானது.

ராஜபக்ச குடும்பத்தில் ஒருவர் விமானத்தில் தப்பிச் செல்வது போன்ற ஒரு மாயை ஏற்படுத்திய, அந்த வீடியோ இராணுவ உளவுத்துறையால் சமூகமயமாக்கப்பட்ட ஒரு உளவியல் நடவடிக்கையாகும்.

அந்த வாகனங்கள் வெளிநாட்டில் இருந்து வந்த பாதுகாப்பு படைகளின் பிரதானியும் , முன்னாள் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வாவை அழைத்து வருவதற்காக சென்ற வாகனத் தொடரணியாகும்.

எனினும், கோட்டா துபாய்க்கு விமானம் மூலம் அல்ல, கடல் மார்க்கமாகவே செல்ல உள்ளார் என்பதே இப்போதைய தகவலாக  உள்ளது.

துபாயில் காலடி எடுத்து வைத்த பிறகுதான் கோட்டாவின் ராஜினாமா..

அவர் கடல் மார்க்கமாக செல்வதாக இருந்தால் ஏற்கனவே சரக்குகளை ஏற்றிச் சென்ற கடற்படையின் கஜபாகு கப்பலில்தான் செல்வார் என நம்பலாம்.

கப்பலின் வேகம் 29 நாட்ஸ். அதாவது, ஒரு மணி நேரத்திற்கு பயணிக்கக்கூடிய கடல் மைல்களின் எண்ணிக்கை 29 ஆகும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில்  கடலில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப இலங்கையிலிருந்து துபாய் செல்லும் கப்பலுக்கு , கடல் அலைகளும் காற்றும் தடையாக இல்லாமல் ஒரு சாதகமாகவே உள்ளது.

கடல்சார் அடிப்படையில், இது ஒரு ‘ஆதரவு மின்னோட்டம்’.

அதன்படி கஜபாகு கப்பல் இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துறைமுகத்திற்கு செல்ல அதிகபட்சமாக 3 நாட்கள் ஆகும்.

கோட்டா அங்கு சென்ற பின் குடியேற இன்னொரு நாள் தேவைப்படும். அதனால்தான் ராஜினாமா அறிவிப்பை வெளியிட 4 நாட்கள் எடுத்துக் கொள்கிறார் என ஊகிக்கலாம்.

ஏனென்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு , நாட்டை விட்டு தப்பிக்க முயன்றால் திடீரென்று சலுகைகள் இல்லாதவனாக மாறி பிரச்சனையில் சிக்க நேரிடும் என அவர் நினைத்திருக்க வேண்டும்.

அதனால் துபாயில் காலடி எடுத்து வைத்த பின்னர் ராஜினாமாவை அறிவிக்க முடிவு செய்திருக்க வேண்டும். அது பாதுகாப்பான ஒரு விடயமாக கருதியிருக்கலாம்.

நிலைமை இப்படியென்றால், கஜபாகு, சிந்தூரல கப்பல்களை தடுத்து நிறுத்துவதற்கான சட்டத்தை போராட்டத் தலைவர்களும், சட்டத்தரணிகளும் பயன்படுத்துவதற்கு இன்னும் இடமுண்டு என்று நினைக்கிறோம்.

தேசிய செல்வத்தை பாரியளவில் சூறையாடி தாய்நாட்டை வங்குரோத்து செய்த ராஜபக்சக்களை தப்ப விடக்கூடாது. அவர்கள் செய்த குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

– உள்ளக தகவல் சேவையின் நிருபர்
தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.