போராட்டத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை 130 ஆக அதிகாிப்பு.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்போது போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.

நாடாளுமன்றத்துக்குப் பிரவேசிக்கும் பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 90 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 5 பெண்களும், பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த இருவரும், ஊடகவியலாளர்கள் இருவரும் அடங்குகின்றனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு கோரி நேற்று மாலை நாடாளுமன்ற வளாகம் மற்றும் நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள சபாநாயகரின் இல்லத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்கு இருவேறு சந்தர்ப்பங்களில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டனர்.

இதேவேளை, கொள்ளுப்பிட்டி – ப்ளவர் வீதிப் பகுதியில் உள்ள பிரதமர் செயலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், காயமடைந்த 40 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நேற்று முற்பகல் பிரதமர் செயலகம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர். இதன்போது, அவர்கள் பல தடவைகள் பிரதமர் செயலகத்துக்குள் நுழைய முற்பட்டனர்.

அவர்களைக் கலைப்பதற்காகப் பொலிஸார் பல தடவைகள் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டனர்.

அதனையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் செயலகத்துக்குள் நேற்றுப் பிற்பகல் உட்பிரவேசித்தனர்.

இந்தநிலையில், அவர்கள் அங்கு தொடர்ந்தும் தங்கியிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.