லுமும்பாவும் : புரட்சியாளர்கள் பற்ற வைத்த நெருப்பும் – சண் தவராஜா

உலகில் காலத்துக்குக் காலம் புரட்சியாளர்கள் தோன்றியவண்ணமேயே உள்ளனர். மானுட விடுதலையை நேசிக்கும் அத்தகையோர் பல சமயங்களில் தங்கள் உன்னத இலட்சியத்தை வென்றெடுக்கின்றனர். ஒருசிலர் எதிரிகளாலும், துரோகிகளாலும் வஞ்சகமாகக் கொன்றொழிக்கப்படுகின்றனர். என்றாலும், புரட்சியாளர்கள் பற்ற வைத்த நெருப்பு காலங்காலமாகக் கனன்று கொண்டே இருப்பதைப் பார்க்க முடிகின்றது.

புரட்சியாளர்களின் புகழை மழுங்கச் செய்து, அவர்களின் எண்ணங்களை மக்களின் மனங்களில் இருந்து மறக்கடிக்கச் செய்ய எதிரிகள் எத்தகைய தந்திரங்களைக் கையாண்டு வந்தாலும் அவர்களின் புகழ் காலத்தால் அழிக்க முடியாததாக மக்கள் மனதில் நிரந்தரமாக நீக்கமற நிறைந்து இருப்பதைப் பார்க்க முடிகின்றது.

அத்தகைய புரட்சியாளர்கள் பலரை 20ஆம் நூற்றாண்டு அதிக அளவில் கண்டிருக்கின்றது. லெனின், ஸ்ராலின், மாவோ, ஹோ சி மின், பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா என இந்தப் பட்டியல் நீளமானது. மானுட விடுதலையை நேசிக்கும் இடதுசாரிகளான இவர்கள் தாம் வாழ்ந்த காலத்தில் மக்கள் மனதில் அதிக அளவில் இடம் பிடித்தது மட்டுமன்றி, மறைந்த பின்னரும் கூட இன்றுவரை உலகெங்கும் போராடும் மக்களுக்கு முன்மாதிரியாக, ஊக்க சக்தியாக விளங்கி வருகின்றனர். இவர்களின் வரிசையில் ஆபிரிக்காவில் தோன்றிய ஒரு புரட்சியாளர்
பற்றிஸ் லுமும்பா.

லுமும்பா என்ற பெயரை சிறி லங்காவில் வாழும் இடதுசாரிகள் நிச்சயமாக அறிந்திருப்பர். அது மட்டுமன்றி ஜே.வி.பி. இயக்கத்தின் முன்னாள் தலைவரான ரோஹண விஜேவீர பற்றித் தெரிந்தவர்களுக்கும் இந்தப் பெயர் பரிச்சயமாக இருக்கலாம்.
60களின் பிற்பகுதியில் தீவிர அரசியலில் பிரவேசித்த விஜேவீர, அப்போதைய சோவியத் ஒன்றியத்தில் இருந்த லுமும்பா பல்கலைக் கழகத்தில் படித்தவர். உலகின் முதல் பொதுவுடமை நாடான சோவியத் ஒன்றியத்தில் ஒரு பல்கலைக் கழகத்தில் பெயர் சூட்டப்படும் அளவிற்கு லுமும்பாவின் பணி இருந்திருக்கின்றது என்பது ஒன்றே அவரின் பெருமையைப் பறைசாற்றப் போதுமானது.

பெல்ஜியத்தின் காலனித்துவ நாடாக விளங்கிய தற்போதைய கொங்கோ ஜனநாயகக் குடியரசின் அன்றைய பெயர் ஸெயரே. 1885 முதல் 1960 இல் சுதந்திரம் அடையும் வரை பெல்ஜியத்தின் காலனித்துவ நாடாக இருந்த போதிலும், 1908 வரையான முதல் 23 வருடங்கள் அப்போதைய பெல்ஜிய மன்னரான லியோபோல்டின் தனிப்பட்ட சொத்தாக அந்த நாடு இருந்தது. உலக நாடுகளின் வரிசையில் 11ஆவது பெரிய நாடாகவும், ஆபிரிக்கக் கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடாகவும் விளங்கும் கொங்கோவின் மக்கள் தொகை, பெல்ஜியம் நாட்டின் மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் 10 மடங்குக்கும் அதிகமானது. இருந்தும், துப்பாக்கிகளோடும் பீரங்கிகளோடும் கைகளில் பைபிள்களை ஏந்திவந்த வந்த வெள்ளையர்களால் அவர்களது நாடு அடிமை கொள்ளப்பட்டது.

லியோபோல்டின் ஆட்சிக் காலத்தில் கொங்கோ மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. அன்றைய காலகட்டத்தில் 20 மில்லியன் மக்கள் வாழ்ந்ததாகக் கணக்கிடப்பட்ட அந்த நாட்டில், மன்னரின் ஆட்சிக் காலம் முடிவதற்கு இடையில் மக்கள் தொகையில் அரைவாசிப் பேர் கொலை செய்யப்பட்டதாகச் சொல்கின்றது வரலாறு.

முறையான கணக்கு வழக்கு எதுவும் இல்லாத நிலையில் 1 முதல் 15 மில்லியன் வரையான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனப் பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களும் பதிவு செய்துள்ளனர். அந்த நாட்டின் கனிம வளங்கள் யாவற்றையும் கொள்ளையிட்ட மன்னர், இரப்பர் தோட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட மாதாந்த இலக்கு எட்டப்படாத வேளைகளில் இரப்பர் தோட்டங்களில் பணியாற்றும் கிராமவாசிகள் மற்றும் அவர்களது பிள்ளைகளின் கைகளையும், கால்களையும் வெட்டியெறிந்து தண்டனை வழங்கியுள்ளார். இவை அங்கு இழைக்கப்பட்ட கொடுமைகளின் ஒரு சான்றே.

பெல்ஜியம் சென்று வந்த மதகுருவான ஜோன் ஹாரிஸ் என்பவர், மன்னரின் பிரதிநிதிக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகின்றார். ‘‘Insongo Mboyo என்ற கிராமத்துக்கு அண்மையில் நான் சென்று வந்தேன். மக்களின் கையறு நிலையும், அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளும் விபரிக்க முடியாதவையாக உள்ளன. அந்த மக்களின் கதைகளைச் செவிமடுத்த பின்னர் அவர்கள் செய்யும் குற்றங்களுக்காக அவர்களுக்கு எதிர்காலத்தில் தங்களால் கொலை மாத்திரமே தண்டனையாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியை தங்கள் சார்பில் நான் வழங்கியிருக்கிறேன்.”

வாசிக்கும் போதே நெஞ்சம் பதறுகின்ற இந்தக் கொடுமைகளை அனுபவித்தவர்களின் உணர்வு எவ்வாறு இருக்கும்? அதிலும், இத்தகைய கொடூரங்களைப் புரிந்தவர்களின் முன்னிலையிலேயே தங்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றிப் பேசினால்? இதுதான் பற்றிஸ் லுமும்பா செய்த மிகப் பெரிய தவறு.

தபால் நிலைய ஊழியராக வாழ்க்கையைத் தொடங்கி, ஊடகவியலாளராக மாறி, பின்னர் கொங்கோ தேசிய இயக்கம் என்ற பெயரிலான அரசியல் கட்சியை ஆரம்பித்து 3 வருடங்களிலேயே தனது நாட்டுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த லுமும்பா  1960ஆம் ஆண்டு யூன் மாதம் 30ஆம் திகதி தனது நாட்டின் சுதந்திர தினத்தன்று ஆற்றிய உரையே அவரது உயிருக்கு உலை வைத்தது.

வைபவ ரீதியாக சுதந்திரம் வழங்கும் நிகழ்வு தலைநகரில் நடைபெற்ற வேளை, கலந்து கொண்டு உரையாற்றிய பெல்ஜிய அரசர் Boudouin, தனது முன்னோடி லியோபோல்ட் காலத்திலிருந்து கொங்கோ மக்களை நாகரிகமயப்படுத்தும்(?); பணியில் தனது நாடு புரிந்த சாதனைகளையும், அன்றைய நாளில் கொங்கோ குடியரசுக்கு மனமுவந்து சுதந்திரம் வழங்குவது பற்றியும் பெருமிதத்தோடு உரையாற்றியிருந்தார்.

பதிலுரை நிகழ்த்திய லுமும்பா, மன்னரை வைத்துக் கொண்டே பெல்ஜிய காலனித்துவ ஆட்சியாளர்கள் கொங்கோ மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பட்டியலிட்டார். வானொலியில் நேரடியாக ஒலிபரப்புச் செய்யப்பட்ட அந்த உரை உள் நாட்டிலும், ஆபிரிக்கக் கண்டத்திலும், சுதந்திரத்தை நேசிக்கும் மக்கள் மத்தியிலும் வெகுவாகக் கொண்டாடப்பட்ட அதேவேளை மேற்குலகின் பலத்த கண்டனத்துக்கு ஆளானது.

அதன் தொடர்ச்சியாக அவரது ஆட்சிக்கு எதிராகக் கலகங்கள் உருவாக்கப்பட்டன. அவரது நெருங்கிய சகாவாக விளங்கிய கேணல் மொபுட்டோ அவருக்கு எதிரான சதியில் ஈடுபட்டார்.

பெல்ஜியம், அமெரிக்கா, பிரித்தானியா என்பவை லுமும்பாவை எப்பாடுபட்டாவது ஒழித்துக் கட்டுவது என்ற முடிவுக்கு வந்தன. (சி.ஐ.ஏ. உளவாளிகள் பின்னாளில் வழங்கிய வாக்கு மூலங்களில் லுமும்பாவைக் கொலை செய்ய இரண்டு தடவைகள் முயற்சிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. விசம் கொடுத்துக் கொல்லவும், துப்பாக்கியால் சுடவும் முயன்றதாக அவர்கள் தெரிவித்தனர்.)

லுமும்பாவைக் கொலை செய்வதில் அமெரிக்கா அக்கறை கொண்டதற்கு மற்றுமொரு காரணமும் உள்ளது. அணு குண்டு செய்வதற்குத் தேவையான யுரேனியம் மூலப் பொருளை கொங்கோவில் இருந்தே அமெரிக்கா பெற்று வந்தது. தனது தேவையின் 50 விழுக்காடை நிறைவு செய்யும் கொங்கோ தனது பிடியில் இருந்து நழுவிச் செல்வதையும், அது தனது எதிரியான சோவியத் ஒன்றியத்தின் பக்கம் சாய்வதையும் எப்பாடு பட்டாவது தடுக்க நினைப்பது அமெரிக்காவின் பண்புகளுள் ஒன்று என்பது சொல்லாமலேயே புரியும்.

யூன் 24இல் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்ற லுமும்பாவால் 3 மாதங்களுக்குக் கூடப் பதவியில் இருக்க முடியாமல் போனது. நாட்டில் ஏற்பட்ட குழப்பங்களைச் சமாளிக்க ஐ.நா. சபையின் உதவியை அவர் நாடினார். பனிப் போர் உச்சத்தில் இருந்த அன்றைய காலகட்டத்தில் அவருக்கு நேசக் கரம் நீட்ட அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தடையாக இருந்தது. இதனால் அவர் சோவியத் ஒன்றியத்தின் தயவை நாட வேண்டிய நிலை உருவானது. ஆனாலும், அவரை யாராலும் காப்பாற்ற முடியவில்லை.

தலைநகரை விட்டுப் பாதுகாப்புத் தேடி ஓடிய அவரை மொபுட்டுவின் படையினர் டிசம்பர் முதாம் திகதி கைது செய்தனர். கட்டாங்கன் மாநிலப் பிரிவினைவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அவர் 1961ஆம் ஆண்டு யனவரி 17ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.

குழியொன்றில் வீசப்பட்ட அவரது சடலம் மறுநாள் எடுக்கப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டு சல்பூரிக் அமிலத்தில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் பெல்ஜியக் கூலிப்படையினரும் சம்பந்தப்பட்டிருந்தனர். உடனிருந்த பெல்ஜியக் காவல் துறையைச் சேர்ந்த Gerard Soete என்பவர் லுமும்பாவின் தங்கத்திலான பல் ஒன்றை அடையாளச் சின்னமாக எடுத்துச் சென்றிருந்தார்.

61 வருடங்களின் பின்னர், கடந்த யூன் 20ஆம் திகதி அந்தப் பல்லை பெல்ஜிய அரசாங்கம் லுமும்பாவின் குடும்பத்தினரிடம் கையளித்தது. யூன் 30இல் தலைநகர் கின்ஷாசாவில் நடைபெற்ற சுதந்திர தின வைபவத்தின் ஒரு அங்கமாக அந்தப் பல் லுமும்பாவின் நினைவாக அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் நினைவிடம் அமைக்கவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

லுமும்பா படுகொலை செய்யப்பட்டு 61 ஆண்டுகள் கடந்த பின்னரும் கொங்கோவில் மாத்திரமன்றி ஆபிரிக்கக் கண்டம் முழுமையிலும் அவர் நினைவு கூரப் படுகின்றார்.

ஆபிரிக்காவில் நடைபெறும் மக்கள் போராட்டங்கள் எதுவானாலும் லுமும்பாவின் நிழற்படம் அங்கே நிச்சயம் இடம்பெறும். ஆபிரிக்கக் கண்டம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என நினைக்கும் அனைவருக்கும், லுமும்பா ஆற்றிய சுதந்திர தின உரை இன்றளவில் ஒரு ஆகர்சமாக இருந்து வருகின்றது.

லுமும்பாவின் உடலத்தைச் சிதைத்தவர்களின் நோக்கம் அவரின் பெயரில் ஒரு நினைவிடம் அமைந்துவிடக் கூடாது, அது மக்களின் அபிமானம் பெற்ற ஒரு இடமாக மாறிவிடக் கூடாது என்பதே. ஆனால், புரட்சியாளர்களை வரலாற்றின் பக்கங்களில் இருந்து இலகுவில் யாராலும் மறைத்துவிட முடியாது என்பதே யதார்த்தம்.

பெல்ஜிய அரசர் பிலிப் கடந்த மாதம் கொங்கோ ஜனநாயக் குடியரசுக்கு வருகை தந்து நாடாளுமன்றில் உரையாற்றிய போது, கடந்த கால காலனித்துவ ஆட்சி எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததும், இனவெறி அடிப்படையிலானதும் எனக் கூறியிருந்தார்.

ஆனால், அந்த ஆட்சிக் காலத்தில் கொங்கோ மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக அவர் மன்னிப்புக் கோரவில்லை.

ஐரோப்பிய நாடாளுமன்றம் பெல்ஜியத்தின் தலைநகர் புருசெல்சில்தான் அமைந்துள்ளது. ஐரோப்பிய ஜனநாயகத்தின் அடையாளமாகக் கருதப்படும் அந்த நாடாளுமன்றத்தைத் தன்னகத்தே கொண்டுள்ள பெல்ஜியத்தின் கடந்தகால வரலாறு இவ்வாறு இருக்க, உலகில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்குப் பாடுபடுவதாக பெல்ஜியம் உட்பட ஐரோப்பிய நாடுகள் உரக்கக் குரல் தருவது எத்தகைய முரண்நகை?

Leave A Reply

Your email address will not be published.