வரலாற்று நாயகர் மண்டேலா! இன்று மண்டேலா பிறந்த தினம்.

நெல்சன் மண்டேலா 1918ஆம் ஆண்டு ஜீலை மாதம் 18ம் திகதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார்.

இவரது தந்தை சோசா. பழங்குடி இனமக்கள் தலைவர். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாக பிறந்தவர் தான் மண்டேலா. இவரின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவரின் சிறுவதில் குத்துச் சண்டை வீரராகவே அறியப் பெற்றார்.

அந்தக் குடும்பத்திலிருந்து முதன்முதலில் பாடசாலை சென்ற மண்டேலா, இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டே பாடசாலையில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். இவரின் பெயரின் முன்னால் உள்ள நெல்ச் இவர் முதலில் கல்வி கற்ற பாடசாலையின் ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாப்பிரிக்கா பல்கலைக் கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.

1941ம் ஆண்டு ஜோகன்ஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக் கல்வி பயின்றார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.

அப்போது நோமதாம் சங்கர் என்ற செவிலியரைத் திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்கா தேசியக் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும் அவருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.பின்னர் தென்னாப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் கட்சியைத் தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது.

ஐந்தாண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958ம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தனது கணவரின் கொள்கைகளுக்காகப் போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகளும் 2வது மனைவி மூலம் 2 குழந்தைகளும் உள்ளனர்.

தென்னாப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் வெள்ளையர்களே ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர்.

1939ம் ஆண்டில் தனது 21வது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்துப் போராடத் தொடங்கினார் நெல்சன் மண்டேலா.

1948ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசு கறுப்பின மக்களுக்கெதிரான முறையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது. மண்டேலாவும் அவரின் பல்கலைக்கழகப் தோழனாகிய ஒலிவர் ரம்போவும் இணைந்து இன ஒதுக்கலுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காகச் சட்ட ஆலேசானைகளை வழங்கினர்.

இவரது வன்முறையற்ற போராட்டம் வளர்சியடைவதைக் கண்ட வெள்ளையர் அரசு 1956ல் அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தார் எனக் கைது செய்தது.

சிறையில் இருந்த வெளிவந்த மண்டேலா தீவிரமாகச் செயல்பட்டார். இதன் காரணமாக 1960களில் ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் வேகமாக வளர்ச்சியடைந்தது. 1960ல் ஆப்பிரிக்கர்களுக்குச் சிறப்பு கடவுச்சீட்டு வழங்குவதற்கு எதிராக ஊர்வலம் ஒன்றை நடத்தினார். பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 69 பேர் கொல்லப்பட்டார்கள்.

1956ம் ஆண்டு டிசம்பர் 5ல் தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்களுக்காக மண்டேலாவும் அவரின் சுமார் 150 தோழர்களும் கைது செய்யப்பட்டனர். நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பிறகு 1960ல் அனைவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து அறப்போர் மூலம் போராடி உரிமைகளைப் பெற முடியாதென்பதை உணர்ந்து கொண்ட மண்டேலா ஆயுத வழிமுறையை நாடினார். இதனையடுத்து அவரைக் கைது செய்ய வெள்ளையாட்சியினர் முடிவு செய்தனர்.

1961ஆம் ஆண்டுஆப்பிரிக்க தேசியக் காங்கிரசின் ஆயுதப்படைத் தலைவராக மண்டேலா உருவெடுத்தார். இதை உருவாக்கியதிலும் இவருக்குப் பங்குண்டு வெளிநாட்டு நட்பு சக்திகளிடமிருந்து பணம் மற்றும் ராணுவ உதவிகளைப் பெற்று, அரசு மற்றும் ராணுவ கேந்திர நிலையங்கள் மீது கொரில்லா பாணியிலான தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தினார்.

1961 டிசம்பர் 16ம் நாள் இனவெறிக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடத்தப்பட்டது. அரசாங்கம் கடுமையாகக் கெடுபடி செய்ததால் 1961ஆம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார்.

1962ம் ஆண்டு 5ம் நாள் இவர் தங்கியிருந்த பகுதிக்குள் மாறு வேடமணிந்து புகுந்து காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டுக் கைதாகினார். திட்டமிட்டபடி மண்டேலா உட்பட 10 முக்கிய ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது வெள்ளைக்காரர்களின் அரசு.

அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தமை, அமைதியைக் குலைத்தமை, கலகத்தை உருவாக்கியமை எனக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தென்னாப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அப்போது அவருக்கு வயது 46, அன்று ஆரம்பித்த அவரின் சிறைவாசம் 27 ஆண்டுகளாக தொடர்ந்தது.

பல ஆண்டுகள் அவரைத் தனிமைச் சிறையில் அடைத்துக் கொடுமை செய்தது தென்னாப்பிரிக்க அரசாங்கம். மனைவியைச் சந்திப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988ஆம் ஆண்டு கடுமையான காசநோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச் சிறைக்க மாற்றப்பட்டார்.
மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது.

ஆனால் தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்துவந்தார்.மண்டேலா விடுதலை செய்யும் படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் நடந்து வந்தன.

மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம் என்று தென்னாப்பிரிக்க அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கோர மறுத்து விட்டார். தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுப் புதிய ஜனாதிபதியாக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார்.

இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது. மண்டேலா 11.2.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று ஜனாதிபதி டெக்ளார்க் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.மண்டேலா, 1962ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவைப் போல் இவ்வளவு நீண்ட நாட்கள் சிறையில் வாடியவர்கள் கிடையாது.

விடுதலை பெற்ற போது அவருக்கு வயது 71.மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாகப் பிரதமர் வி.பி.சிலங் தலைமையில் வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா அரசாங்கம் அறிவித்தபடி 11.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.
மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோத்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.

மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலகத் தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்குத் திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக் தேசியக் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அப்போது, “இனவெறி ஆட்சியைத் தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது.
நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயக ரீதியில் தேர்ந்து எடுக்கப்படும் அமைப்பு தான் நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரைப் போராடுவோம்’ என்று மண்டேலா பேசினார்.

உலகச் சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு நேரு சமாதான விருது வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு சென்று அந்த விருதை பெற்றார்.

1990ல் இந்தியாவின் பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது. 1993ல் உலக அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மாகாந்தி சர்வதேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்தநாளான ஜுலை 18ம் திகதியைச் சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது.

1994 மே 10ம் திகதி அவர் தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி ஆனார். ஜனாதிபதி ஆனபின், 1998ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கப் பாடசாலைகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளைக் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார்.

தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுப் பதவி வகித்தபின் 1999ல் பதவியை விட்டு விலகினார். இவர் 2வது முறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.