அஞ்சாதே அண்ணா , அரகலயவை அழித்துக் காட்டுகிறேன் : அரசியல் பார்வை

மொட்டு கட்சியினரது வாக்குகளால் ரணிலை வெற்றி  பெற வைத்த மகிழ்ச்சியில் ,  பாராளுமன்றத்தில் இருந்து வெளியே வந்த மஹிந்த ஊடகங்களின் கேள்விகளுக்கு  அருமையான  ஒரிரு வார்த்தைகளை  சொன்னார்.

ரணிலுக்கு வாக்களித்தீர்களா என ஊடகவியலாளர்கள் வினவியபோது, ​​
‘இல்லை ……  டலஸ் எமது வேட்பாளர்.  டலஸை போட்டியிட வைத்தோம். டலஸ் தோற்று போனார்,” என்றார் மகிந்த.

ரணிலை ஜனாதிபதியாக்கிவிட்டு வெளியே வரும் போது மஹிந்த வெளியிட்ட முதலாவது அறிக்கை இதுவாகும்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இப்படிச் சொன்னவர் பொதுஜன பெரமுனவின் (மொட்டு) தலைவரே தவிர வேறு யாரும் இல்லை.

ரணிலை ஜனாதிபதியாக்கிய பின்னர் பொதுஜன பெரமுன வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையாக பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த இதனைத் தெரிவித்துள்ளார் என எடுத்துக் கொள்ளலாம்.

ஜனாதிபதியான பிறகு கங்காராமுக்குச் சென்ற ரணிலிடம், ‘ராஜபக்சேவின் நண்பராகத்தானே நீங்கள் ஜனாதிபதியானீர்கள்?’ என ஒரு பத்திரிகையாளர் கேட்டதற்கு,

எரிந்து விழுந்த ரணில், “நான் ராஜபக்சவினருக்கு எதிராக செயல்பட்டவன். இதோ இவர்கள்தான் ராஜபக்சவினரது ஆட்கள்”  என்றார்.

‘என்ன இது ஒரு நடகமா…?’

இந்த நாடகத்துக்கு பின்னால் , மூன்று அரசியல் டீல்கள் அல்லது திட்டங்கள் உள்ளன.

‘இந்த மூன்று டீல்கள் என்ன…?’

முதல் டீல் ,
இதுவொன்றும்  ராஜபக்ச அரசு அல்ல, புதிய சர்வகட்சி அரசு என வெளியுலகுக்கு காட்டிக் கொள்ள  ரணிலும் – மகிந்தவும் நடித்த சொதப்பல் நாடகம்.

சர்வகட்சி அரசாங்கம் ஒன்று இல்லாத அரசொன்றுக்கு,  சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து உதவிகளைப் பெற முடியாது என்பது ராஜபக்சக்களுக்கு நன்றாகவே தெரியும்.

அதற்காக ஆரம்பத்தில்  கோட்டா ஜனாதிபதியாக இருக்கும் போது , ஐதேகவின்  ரணிலை பிரதமராக்கினார்கள்.

ஆனால் அதற்கும்  IMF மற்றும் வெளிநாடுகளில் இருந்து எதிர்பார்த்த நல்லெண்ண வரவேற்பும் கிடைக்கவில்லை.

இலங்கை அரசுக்கு உதவிகளை வழங்க வேண்டுமானால் , நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்புமாறு சர்வதேச நாணய நிதியமும் , வெளிநாடுகளும் அறிவுறுத்திக் கொண்டே இருக்கின்றன.

அவர்கள் அரசியல் ஸ்திரத்தன்மையை என மறைமுகமாகக் கூறுவது, காலிமுகத் திடல் அரகலய போராளிகளது கோரிக்கைகளுக்கு ,  அமைதியான தீர்வை வழங்குங்கள் என்பதுதான்.

உலகின் பிற நாடுகளில் இது போன்ற போராட்டங்கள் எழுந்த போதெல்லாம் ,  ஆட்சி கவிழ்ப்பு மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.

ஒன்று பொது தேர்தல் ஒன்றை நடத்தி அத்தகைய தீர்வைக் காட்டுங்கள் அல்லது பாராளுமன்றத்தில் அத்தகைய மாற்றத்தைக் காட்டுங்கள் என்று IMF மற்றும் கடன் தரவுள்ள சர்வதேச நாடுகள் கூறுகின்றன.
கோட்டா அதிபராக இருந்த போது , ரணிலை பிரதமராக்கிய ராஜபக்சவின் நாடகம் எதிர்பார்த்தது போல சர்வதேசத்தை மகிழ்ச்சிப்படுத்தவில்லை.

அரகலய போராட்டம் மேலும் மேலும் உக்கிரமானது.

அதன் பின்னரே ஜனாதிபதி ஆகும் நாடகத்தை ரணில் செயல்படுத்திக் காட்டினார்.

134 வாக்குகளை ரணிலுக்கு பெற்றுக் கொடுத்ததே , ரணிலுக்கு  இருக்கும் ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்தவேயாகும்.

சஜித் கட்சியினதும் , தமிழ் கட்சிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கியதே ரணிலின் அரசாங்கத்தை சர்வகட்சி அரசாங்கமாக காட்டும் நோக்குடன்தான்.

‘ராஜபக்சவின் இப்படியான நாடகங்களால் IMF மற்றும் நிதி  கொடுக்கும் நாடுகள் ஏமாந்துவிடுமா?’

அப்படி ஏமாந்து போனார்களா என கணிக்க சர்வதேச ஊடகங்கள்,  ரணில் ஜனாதிபதி ஆனதை எப்படி செய்தியாக்கின என்பதை பார்க்க வேண்டும்.

ரணில் ஜனாதிபதியாவதற்கு முன்பே ராய்ட்டர்ஸ் சொன்ன கதை இது.

‘ஆறு முறை பிரதமராக இருந்தவர் மீண்டும் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால், இலங்கைக்கு அது சோகம்தான்…’ – ராய்ட்டர்ஸ்

இலங்கையில் மாற்றமொன்றை ஏற்படுத்த புதிய முகங்கள் தேவை என  அரகலய போராளிகள் சொல்கிறார்கள்…’ -பி.பி.சி.

‘மக்கள் நிராகரித்த ரணில் , ஜனாதிபதியானால் மீண்டும் போராட்டம் தொடங்கும்…’
-சீ.பி.எஸ். செய்தி

ரணிலின் வெற்றியை சர்வதேச ஊடகங்கள் மேற்கண்டவாறுதான் செய்திகளாக  வெளியிட்டன.

எனவே ரணிலை ஜனாதிபதியாக்கி மட்டும் ,  சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாடுகளை ஏமாற்றுவது என்பது ராஜபக்சக்களுக்கு இலகுவானதல்ல.

ரணில் மூலம் வெளிநாடுகளில் இருந்து சர்வதேச நாணய நிதியத்தின் நிதியையும், டொலரையும் பெற்றுக் கொண்டு மீண்டும் களத்துக்கு வரலாம் என ராஜபக்சக்கள் நினைக்கின்றனர்.

இரண்டாவது டீல் (ஒப்பந்தம்)

2024ம் ஆண்டில் ராஜபக்ஷவின் முடிக்குரிய இளவரசர் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்கு , ரணிலைப் பயன்படுத்தி சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை இல்லாதொழிப்பதாகும்.

பொதுஜன பெரமுன (மொட்டு) தலைவர்களை முன்னிறுத்தி ரணிலுக்காக வாக்கு கேட்காமல் , ஹரீனையும், மனுஷவையும், வஜிரவையும் முன் நிறுத்தியதி, ரணில் ஐ.தே.க.வில் இருந்து ரணிலை போட்டியிட வைத்து , ஐதேக ஆட்சியொன்றை கொண்டுவர முயல்வது  போல ஒரு பிம்பத்தை உருவாக்க முனைந்தார்கள்.

அப்படியான ஒரு தந்திர செயல்பாட்டால் சஜித்தோடு இணைந்துள்ள முன்னைய ஐதேகவினரையும் ஈர்த்து பிரித்தெடுக்க முடியும் என கணக்கு பண்ணினார்கள். அதுவேளை வெளிபரப்புரைகளையும் அதற்கேற்றவாறு ராஜபக்ச ஆதரவு ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் வழி செய்தனர்.

ரணில் ஜனாதிபதி வேட்பாளரான போது , நாடாளுமன்றத்தின் தீர்மானங்களை உறுதிப்படுத்த மனுஷவும் , தேர்தல் வாக்குகளை கண்காணிக்க ஹரீனும் நியமிக்கப்பட்டதே, ரணில் உருவாக்கப் போவது ராஜபக்ச அரசு  அல்ல , ஐதேக அரசொன்றையே  என வெளி பார்வைக்கு காட்டுவதற்கேயாகும்.

அந்த வேலையைச் செய்யுமாறு ரணிலுக்கு ஆலோசனை வழங்கியவர்கள் ராஜபக்சக்கள்தான்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற பின் , ரணில் சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்கி உலகமெங்கும் போகும் போது , ரணிலின் யூ.என்.பி. நபர்களான ஹரீனையும் , மணுசவையும் நீக்கப்படக் கூடாது என ராஜபக்சக்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.

‘இதனால் ராஜபக்ச எதிர்ப்பாளர்கள் ஏமாந்து போவார்களா?’

ராஜபக்ச எதிர்ப்பாளர்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல.

சஜித் தரப்பிலிருந்து , ரணில் இத்தனை வாக்குகளைப் பெற்றார், அத்தனை வாக்குகளைப் பெற்றார் என்று ராஜபக்சேவின் நாடகத்திற்கு கதைகளை சோடித்து  பரப்புகிறார்கள்.

20வது திருத்தத்தின்  போது  , பாராளுமன்றத்தில் 156 வாக்குகளை கோட்டாபயவை பலப்படுத்தவே மொட்டு கட்சி  வழங்கியது.

அப்படியான மொட்டு தனது சொத்துக்களையும் , அரசியலையும் பாதுகாக்க இப்படி வாக்களிக்களிகாமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.

எனவே, ரணிலுக்கு ஆகக் குறைந்தது 120 முதல் 125 வாக்குகள் பெற்றுக் கொடுப்பது ராஜபக்சேவுக்கு பெரிய பிரச்சனையே இல்லை.

20வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக 65 பேர் மட்டுமே வாக்களித்தனர்.

அந்த 65 பேரிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளும் ஜே.வி.பி வாக்குகளும் சேர்ந்தே இருந்தன.  ஹரின், மனுஷா ஆகியோரின் வாக்குகளும் அங்கே  பதிவாகின.

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்றத் தேர்தலில் மனுஷவினதும், ஹரினினதும் வாக்குகளை சஜித்தின் கட்சி இழந்தது.

ஜே.வி.பி. தனித்து போட்டியிட்டமையால் , ஜே.வி.பியினது மூன்று வாக்குகளையும் கூட இழந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது சில வாக்குகளை இழந்துள்ளது.

அப்படிப் பார்த்தால் ,  சஜித்துடைய  கட்சியின் பெரும் எண்ணிக்கையிலான வாக்குகள் ரணிலுக்குப் போனது என்று ராஜபக்சக்காரர்கள் சொல்வது படு முட்டாள்தனம்.

பொதுஜன பெரமுனவில் ராஜபக்ஷவைத் தவிர வேறு யாரும் தலை தூக்க முடியாது என்பதை காட்டுவதும் அதே ஒப்பந்தத்தின் (டீல்) மற்றைய பகுதியாகும்.

மகிந்த பிரதமர் பதவியில் இருந்து விலகிய போது, முதலில் ​​பிரதமர் பதவிக்கு டலஸ் பெயர் முன்மொழியப்பட இருந்தபோது, ​​கோட்டாவும், ராஜபக்ச குடும்பமும், அந்த பெயரை வெட்டி, ரணிலை பிரதமராக்கினர். இன்னொருவரை பொதுஜன பெரமுனவுக்குள்ளிருந்து உயர்த்தி விட கூடாது என்ற எண்ணத்திலேயே அது நடந்தது.

கோட்டா ஜனாதிபதி பதவியையும், நாட்டையும் விட்டு ஓடும் போது,  சபாநாயகர் மஹிந்த யாப்பாவை பதில் ஜனாதிபதியாக ஆக்கியிருக்கலாம்.

மஹிந்த யாப்பா பொதுஜன பெரமுனவில் மாற்றுத் தலைவராக வந்து விடுவாரோ என்ற  அஞ்சத்திலேயே அதை ராஜபக்சவினர் செய்யவில்லை.

கடைசியில் பொதுஜன பெரமுனவில் எந்தத் தலைவரையும் உருவாக விடாமல் இளவரசர் நாமலுக்கு முடிசூட ரணிலைத்தான் தேர்ந்தெடுத்தனர்.

‘மூன்றாவது டீல் (ஒப்பந்தம்) என்ன…?’

மூன்றாவது ஒப்பந்தம், ராஜபக்சவை அநாதரவாக்கிய போராட்டக்காரர்களுக்கு பின் புறத்தைக் காட்டுவது.

அரகலய போராட்டத்தின் குறிக்கோள், புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதும் , புதிய ஜனாதிபதியொருவரை கொண்டுவருவதும் என்பதை ராஜபக்சக்கள் அறிந்திருந்தனர்.

அதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், போராட்டத்தை சிதைக்க வேண்டும் என ராஜபக்சக்கள் கணக்கிட்டனர்.

மறுபுறம், ராஜபக்சவினர் என்போர் சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை போல ,  பெரும் சக்தியாக தம்மை இனம் காட்ட ராஜபக்சவினர் நினைத்தனர் .

ரணிலுக்கு 134 வாக்குகள் பெற்றுக் கொடுத்து  ரணிலை ஜனாதிபதியாக்கி அதை நிருபித்தும் காட்டினார்கள்.

குறிப்பாக போராட்டத்தின் பிரதான எதிரியாக இருந்த பசில் ராஜபக்ச அன்றைய போராட்டத்திற்கு தனது பலத்தை முழுமையாக காட்டினார்.

மகிந்த, பசில், நாமல் மட்டுமன்றி வெளிநாட்டில் பதுங்கியிருந்த கோட்டாவும்,   ராஜபக்சக்கள் என்பவர்கள் , அடிக்க – அடிக்க எழும் தலைமுறை என்பதை காட்ட முயன்றார்கள்.

‘நாம் நினைத்தால் ,  நாளைக்கு பிரபாகரனை ஜனாதிபதியாக்க முடிவெடுத்தாலும் அதையும் எம்மால் செய்யலாம்…’ ரணிலை ஜனாதிபதியாக்கிய ராஜபக்சவினர் நாட்டுக்கு சொன்ன செய்தி அதுவாகும்.

‘ரணிலை , ராஜபக்சவினரது டீல்காரர் என்று சொல்லி தோற்கடிக்க முயன்றவர்களே ,  பாருங்கள், அந்த மனிதனை இப்போது ஜனாதிபதியாக்கி காட்டியுள்ளோம்…’ என ராஜபக்சவினருக்கு எதிராக உள்ள  எதிர்கட்சி வாக்காளர்களுக்கு ராஜபக்சக்கள் கூறியுள்ளனர்.

‘இனி அரகலய போராட்டம் முறியடிக்கப்படுமா…?’

போராட்டம் என்பது மக்கள். மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் வரை போராட்டம் ஓயாது.

மே 9ம் தேதி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ராஜபக்சக்கள் முயன்றனர். அது நாட்டையே தீக்கிரையாக்கியது.

“கவலைப்படாதே அண்ணா, போராட்டத்தை எப்படி முடித்து வைப்பது என நான் செய்து காட்டுகிறேன்” என ரணில் சொன்னதும் ராஜபக்சவினர் , ரணிலுக்கு  ஜனாதிபதி பதவியை கொடுத்தனர்.

ஜூலை மாதம்  என்பது மிகவும் மோசமானது.

1983 கறுப்பு ஜூலை நாட்டையே தீயில் ஆழ்த்தியது.

ஜூலை 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் நாட்டை இரத்த வெள்ளத்தில் நனைத்தது.

ராஜபக்ச ரணிலை ஜனாதிபதியாக்கி , அரகலய போராட்டக்காரர்களையும் அடித்து நொறுக்கியதும் அதே ஜூலை மாதம்தான்.

உபுல் ஜோசப் பெர்னாண்டோ
தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.