வாய் தவறி வந்த வார்த்தை.. குடியரசு தலைவரிடம் மன்னிப்பு கோரினார் காங்கிரஸ் எம்.பி அதிர் ரஞ்சன் சவுத்ரி..

காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18- ஆம் தேதி தொடங்கியது. தொடங்கியது முதல் வெள்ளிக்கிழமை வரை அலுவலல்கள் எதுவும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்டவை குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் ஆளுங் கட்சியோ எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்காமல் உள்ளது. இதனால் தொடர் அமளி ஏற்பட்டு அலுவல்கள் நடைபெறாமல் உள்ளன.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, ‘ராஷ்டிரபத்னி’ என காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் போது, காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி ‘ராஷ்டிரபத்னி’ என்று குறிப்பிட்டார். அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து வாய் தவறி அந்த வார்த்தை வந்துவிட்டதாக அவர் விளக்கம் அளித்தார். இருப்பினும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சயை கிளப்பியது. இந்நிலையில், அதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ” ராஷ்டிரபத்னி என்கிற வார்த்தை வாய் தவறி வந்த வார்த்தை என்பதை உறுதியளிக்கிறேன் என்றும் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.