யூடியூப் பார்த்து மது தயாரித்த 12 வயது சிறுவன்.. குடித்த சக நண்பனுக்கு வாந்தி, மயக்கம்

12 வயதே ஆன ஆறாம் வகுப்பு பள்ளி மாணவன் ஒருவர் யூடியூப் பார்த்து வைன் தயாரித்த விபரீத சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த 29ஆம் தேதி வகுப்பறையில் வாந்தியெடுத்து மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் மாணவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவர்கள் மாணவரை பரிசோதித்த நிலையில், அவர் வைன் குடித்திருந்ததும், அது ஒத்துக்கொள்ளாமல் தான் மாணவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் மாணவனை காவலர்கள் விசாரித்தனர். அப்போது அந்த மாணவன் அளித்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த மாணவனுடன் படிக்கும் சக மாணவன் ஒருவர் இவருக்கு வைன் கொண்டு கொடுத்ததாகவும் அதை குடித்ததால் தான் தனக்கு இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டது எனக் கூறினார்.

சிகிச்சையில் உள்ள மாணவன் கொடுத்த தகவலின் பேரில், வைன் கொண்டு வந்த மாணவனை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவலை அந்த மாணவன் கொடுத்தான். அந்த மாணவனின் வீட்டில் பெற்றோர் திராட்சை பழம் வாங்கி வந்துள்ளனர். அந்த திராட்சைகளை பார்த்ததும் மாணவனுக்கு வைன் தயாரிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. ‘சரி நாம் ஏன் யூடியூப் பார்த்து வீட்டிலேயே வைன் தயாரிக்க கூடாது’ என்ற விபரீத ஆசை அச்சிறுவனுக்கு ஏற்பட்டுள்ளது. அதன் பேரில் அந்த மாணவன் பெற்றோருக்கு தெரியாமல் வைன் தயாரித்து அதை அடுத்த நாள் பள்ளிக்கு கொண்டு வந்து சக நண்பனுக்கு தந்துள்ளான். இதை குடித்து தான் அவனது நண்பனுக்கு வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வைன் தயாரித்த மாணவனின் பெற்றோரை அழைத்து விவரத்தை கூறிய காவல்துறை, இனி இவ்வாறு அலட்சியமாக இருக்க வேண்டாம் என எச்சரித்து அனுப்பியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை அறிக்கை அளிக்க மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.