சர்வகட்சி அரசுக்கான பேச்சு ஆரம்பம்.

மகாசங்கத்தினர் தலைமையிலான மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகள், இளைஞர் குழுக்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் சர்வகட்சி அரசின் மீது பலமான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டுள்ளனர் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சர்வகட்சி அரசை அமைப்பது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் நேற்று (02) நடைபெற்ற கலந்துரையாடலில் ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

அரசியல் கட்சிகளுடன் பல சுற்று பேச்சு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் முதல் சுற்றுக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். இரண்டாவது கலந்துரையாடல், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுடன் இடம்பெற்றது. இதில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆகியோருடன் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

மூன்றாவது கலந்துரையாடல் தேசிய காங்கிரஸுடன் இடம்பெற்றதோடு, அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.

சர்வகட்சி அரசை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (03) பல கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.

எதிர்வரும் கலந்துரையாடல்களில் கலந்துகொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.