இலங்கைக்கான கடன்: சீனா, ஜப்பான் நிறுத்தம் திட்டங்கள் அரைகுறையில் கைவிடப்படும் பேராபத்து.

இலங்கை அரசு கடன்களை மீளச் செலுத்த முடியாது என்று அறிவித்தமையால் சீனா மற்றும் ஜப்பான் நிதி உதவியில் முன்னெடுக்கப்பட்ட இரண்டு அபிவிருத்தித் திட்டங்கள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளன.

சீனா

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்துக்குத் தேவையான 51 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை சீன அரசுக்கு சொந்தமான எக்ஸிம் வங்கி இலங்கைக்கு வழங்க இணங்கியிருந்தது. தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடன் நிறுத்தப்பட்டமையை அடுத்து கடவத்தைக்கும் மீரிகமவுக்கும் இடையிலான 37 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கிய திட்டத்தில் பணிபுரிந்த சுமார் 500 சீனர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இந்த கடன் நிறுத்தல் காரணமாக சுமார் 2 ஆயிரம் இலங்கையர்களின் தொழில்களும் ஆபத்துக்கு உள்ளாகியுள்ளன.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டம் 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் இதுவரை இலங்கை அரசின் 33 பில்லியன் ரூபா நிதியில் சுமார் 32 வீதமான வேலைத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை விரிவாக்கும் திட்டத்துக்காக நிதியுதவியை ஜெய்க்கா என்ற ஜப்பானிய சர்வதேச கூட்டுத்தாபனம் வழங்கி வந்தது. தற்போது தமது திட்டக்கடனான 570 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இதையடுத்து இந்தத் திட்டத்தின் தொழிலாளர்களின் பணி ஒப்பந்தத்தையும் இரத்துச் செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 2024 இல் நிறைவடையும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த முனைய திட்டம் முடிவுறுத்தப்பட்டால், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஆண்டுக்கு 15 மில்லியன் பயணிகளை கையாளும் திறனைப் பெறும் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.