ஐ.சி.சி. இன் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரரான மாறிய பிரபாத் ஜயசூரிய.

ஜூலை மாதத்திற்கான ஐ.சி.சி. இன் ஆடவர் கிரிக்கெட் வீரர்கள் விருது பரிந்துரையில் இங்கிலாந்தின் அதிரடி துடுப்பாட்டவீரர் ஜொன்னி பெயர்ஸ்டோவ் மற்றும் பிரான்ஸ் கிரிக்கெட் வீரர் குஸ்டாவ் மெக்கியோன் ஆகியோர் இடம்பெற்ற நிலையில், வழங்கப்பட்ட வாக்குகளுக்கு அமைய இந்த வீரர்களை வீழ்த்தியே பிரபாத் ஜயசூரிய ஜூலை மாதத்திற்குரிய ஆடவர் கிரிக்கெட் வீரராக தெரிவாகியிருக்கின்றார்.

தான் ஐ.சி..சி. இன் கௌரவத்திற்குரிய விருதினை வென்ற விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரபாத் ஜயசூரிய, தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிய மாதத்திலேயே இந்த விருதினை வென்றது மகிழ்ச்சி தருவதாக தெரிவித்ததோடு, தனது தாயக அணியான இலங்கை, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவற்றுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை சமநிலை செய்ய பங்களிப்புச் செய்ததும் சிறந்த விடயமாக இருந்தது எனவும் தெரிவித்தார். அத்துடன் பிரபாத் ஜயசூரிய அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் தனக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.

“டெஸ்ட் போட்டிகளில் ஒரு புதிய வீரராக வந்து, முதல் போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஐந்து விக்கெட்டுக்களைச் சாய்த்தது பிரமாதமான விடயமாகும். அது (இந்த பந்துவீச்சு பிரதிகள்) அவுஸ்திரேலிய போன்ற அணிக்கு எதிராக இருந்தது இன்னும் சிறந்ததாகும்.”

”மூன்று டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 29 விக்கெட்டுக்களைச் சாய்த்தது கருதுவதற்கு மிகவும் நல்ல விடயமாக இருப்பதோடு, அவரே எனது ஐ.சி.சி. இன் (ஜூலை) மாதத்திற்கான சிறந்த வீரர்” என ஐ.சி.சி. இன் மாதத்திற்கான ஆடவர் கிரிக்கெட் வீரரினை தெரிவு செய்வதற்கான வாக்கு வழங்கும் குழுவில் காணப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரவீரரான இர்பான் பதான், பிரபாத் ஜயசூரியவின் அண்மைய அடைவுகள் குறித்து கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

பிரபாத் ஜயசூரிய அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் மொத்தம் 12 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்ததோடு, தனது அறிமுக போட்டியின் மூலம் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை 1-1 என சமநிலை செய்யவும் பங்களிப்புச் செய்திருந்தார்.

இதன் பின்னர் பாகிஸ்தான் தொடரிலும் மொத்தமாக 17 விக்கெட்டுக்களைச் சரித்த பிரபாத் ஜயசூரிய அந்த தொடரினையும் இலங்கை 1-1 என சமநிலை செய்ய முக்கிய காரணமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.