கல்வி அமைச்சர் வடக்கு விஜயம்!

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று , அடுத்த வாரம் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

கல்வி அமைச்சின் செயலர் எம்.என்.ரணசிங்க மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மூத்த பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஆகியோருடன் கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், உறுப்பினர்கள் அடங்கிய குழுவினரே எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சிக்கும், 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

18 ஆம் திகதி வியாழக்கிழமை, முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி, அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடத் தொகுதியின் வைபவ ரீதியான திறப்பு விழா இடம்பெறவுள்ளது. அரசின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 525 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்தக் கட்டடத் தொகுதியைக் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த திறந்து வைக்கவுள்ளார்.

மறுநாள் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள திறந்த பல்கலைக்கழக பிராந்திய நிலையத்திலும் கட்டடமொன்றைக் கல்வி அமைச்சர் திறந்து வைக்கவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர், நிதியாளர் மற்றும் பீடாதிகளுடன் கலந்துரையாடவுள்ள இந்தக் குழுவினர், யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகக் கல்வியின் இன்றைய நிலை மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.