கிழக்கில் 10 வயது சிறுவனை கடுமையாகத் தாக்கிய அதிபர் – உடந்தையாக இருந்த ஆசிரியை கைது; அதிபர் தலைமறைவு.

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் அதிபர், தரம் 5 இல் கல்வி கற்று வரும் 10 வயது சிறுவனைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

காயமடைந்த சிறுவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டார் என்றும், அதிபர் தலைமறைவாகியுள்ளார் என்றும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலைக்குச் சென்ற சிறுவன், பாடசாலைக்கு அருகிலுள்ள கடை ஒன்றுக்குப் பாடசாலை இடைவேளை நேரத்தில் சென்று அங்கு சாப்பிடுவதற்கான பொருட்களை வாங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சிறுவனை அதிபர் கண்டு வரவழைத்துளார். இந்தச் சாப்பாட்டுப் பொருட்களை வாங்க எங்கிருந்து பணம் வந்தது எனக் கேட்டுக் கேட்டு 3 பிரம்புகளை ஒன்றிணைத்து குறித்த சிறுவனின் பின்புறத் தொடைப் பகுதியிலும் ஆசனப் பகுதியிலும் அதிபர் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதையடுத்து வீடு சென்ற சிறுவன் மீது தளும்புகளைக் கண்டு பொற்றோர் விசாரித்தபோது தன்னை அதிபர் அடித்தார் என்று தெரிவித்துள்ளார்.

காயமடைந்த குறித்த சிறுவனை வைத்தியசாலையில் சேர்த்த பெற்றோர், இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்தனர்.

உடனே விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சிறுவனைத் தாக்குவதற்கு உடந்தையாக இருந்த ஆசிரியை ஒருவரைக் கைதுசெய்தனர். இந்நிலையில், சிறுவன் மீது தாக்குதல் நடத்திய அதிபர் தலைமறைவாகியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிஸ் நிலையக் குற்றப் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.