எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தீவிர சிகிச்சை பிரிவில்….

அமெரிக்காவில் கத்திக் குத்தில் பலத்த காயம் அடைந்த, எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு, ‘வென்டிலேட்டர்’ அகற்றப்பட்டது. பேசும் நிலைக்கு அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவிலேயே கண்காணிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் பிறந்தவர், பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 75. இவர் எழுதிய, ‘த சட்டானிக் வெர்ஸஸ்’ என்ற புத்தகம், முஸ்லிம்களின் மனதை புண்படுத்துவதாக கூறி, உலகின் பல இடங்களிலும் போராட்டங்கள் நடந்தன.

இந்தப் புத்தகம் 1988ல் ஈரானில் தடை செய்யப்பட்டது. பின், பல இஸ்லாமிய நாடுகளிலும் தடை செய்யப்பட்டது. ‘ருஷ்டியை கொன்றால், 26 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்’ என ஈரானின் மறைந்த தலைவர் அயதுல்லா கொமேனி அப்போது அறிவித்திருந்தார்.

இதையடுத்து ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 10 ஆண்டுகள் பொலிஸ் பாதுகாப்புடன் இருந்தார் ருஷ்டி.

பிறகு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். கடந்த 2000ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார். இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சல்மான் ருஷ்டி பங்கேற்றார். அப்போது, நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஹாரி மட்டார், 24, என்பவர் மேடைக்குச் சென்று சல்மான் ருஷ்டியை கத்தி யால் சரமாரியாக குத்தினார்.

கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் பலமாக குத்தப்பட்டு இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட ருஷ்டி, அபாய கட்டத்தில் இருப்பதாகவும், பார்வை பறிபோக வாய்ப்புள்ளதாகவும் டாக்டர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று, ருஷ்டிக்கு பொருத்தப்பட்டு இருந்த வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாச கருவி அகற்றப்பட்டது. இருப்பினும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே கண்காணிக்கப்பட்டு வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.