வீட்டின் உரிமையாளரை கொலை செய்து செல்ஃபி – பீகார் இளைஞர் டெல்லியில் கைது

வீட்டின் உரிமையாளரை சுத்தியால் அடித்து கொலை செய்து சடலத்துடன் செல்ஃபி எடுத்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தலைநகர் டெல்லியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு சொந்தமான வீட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் குமார் என்பவர் மாதம் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். அந்த நபருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று மதுபோதையில் பங்கஜ் குமார் தான் குடியிருக்கும் வீட்டிற்கு வந்துள்ளார். இதனைஅறிந்த வீட்டின் உரிமையாளரான சுரேஷ் அவரை அழைத்து விசாரித்துள்ளார்.

இதுபோன்று குடித்துவிட்டு வீட்டிற்கு வரக்கூடாது என சுரேஷ் திட்டிய நிலையில், இவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் பங்கஜ் ஆத்திரம் அடைந்த நிலையில், அந்த நேரம் மன்னிப்பு கேட்டு தனது அறைக்கு சென்றுள்ளார். இருந்தாலும், வீட்டின் உரிமையாளர் திட்டியது பங்கஜ் மனதில் இருந்து நீங்காமல் ஆத்திரம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. பின்னர் நள்ளிரவு நேரத்தில் சுரேஷின் வீட்டின் கதவை தட்டி வீட்டுக்குள் நுழைந்த பங்கஜ், தனது கையில் வைத்திருந்த சுத்தியால் அடித்து சுரேஷை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

அத்தோடு நிற்காமல் சுரேஷின் சடலத்துடன் தனது போனில் செல்பி எடுத்துள்ளார் பங்கஜ். மேலும், சுரேஷின் ஐடி கார்டு, செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு விட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். அடுத்தநாள் விடிந்ததும், சுரேஷின் மகன் ஜகதீஷிடம் தான் வீட்டை காலி செய்துவிட்டதாக பங்கஜ் கூறியுள்ளார். பங்கஜ் பேசிய விதம் சுரேஷின் மகன் ஜகதீஷுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே வீட்டிற்கு சென்ற பார்த்தபோது, தனது தந்தை அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக டெல்லி காவல்துறைக்கு ஜகதீஷ் புகார் அளித்தார்.

துரிதமாக செயல்பட்ட டெல்லி காவல்துறையினர், செல்போன் சிக்னலை வைத்து சுமார் 250 கிமீ தொலைவு தப்பியோடிய கொலைகாரர் பங்கஜை கைது செய்துள்ளனர். தன்னை வீட்டின் உரிமையாளர் அவமானப்படுத்திய ஆத்திரத்தில் இந்த கொலை செய்ததாக பங்கஜ் காவல்துறை வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து கொலையாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அவரை தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.