சிறுவர்களை மையப்படுத்திய அனர்த்த அபாயக்குறைப்பு செயலமர்வு.

சிறுவர்களை மையப்படுத்திய அனர்த்த அபாயக்குறைப்பு தொடர்பான 2 நாள் பயிற்சிநெறி அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் ஏற்பாட்டில் அம்பாரை ரண்பிம விருந்தினர் விடுதியில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.
அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப்பணிப்பாளர் எம்.சி.றியாஷ் தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சிப்பட்டறையில் தெரிவு செய்யப்பட்ட அட்டாளைச்சேனை, உகன, கல்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களின் 30 உத்தியோகத்தர்கள் பங்கு கொண்டனர்.
அனர்த்தங்கள் ஏற்படுகின்ற போது சிறுவர்களது உரிமைகள் பாதுகாப்பு, அனர்த்தங்களை அடையாளம் காணுதல், அனர்த்தக் குறைப்பு வேலைத்திட்டம், அனர்த்த ஆபத்துக்குறைப்பும், வறுமையும், எதிர்வரும் பருவகாலத்தினை அடிப்படையாகக் கொண்ட முன்னோடித் தயார்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயப்பரப்புகளை உள்ளடக்கியதாக இந்தப் பயிற்சி நெறி அமைந்திருந்தது.
அம்பாரை மாவட்ட சமூக உள நல அதிகாரி யு.எல்.அசார்தீன், இறக்காமம் பிரதேச செயலக உளவள ஆலோசகர் ஏ.எல்.எம்.பைசல், மத்திய சுற்றாடல் அதிகாரசபை மாவட்ட அதிகாரி உள்ளிட்ட பலரும் விரிவுரைகளை வழங்கினர்.
அம்பாரை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள அனர்த்த முகாமைத்துவ பயி-ற்சிபெற்ற கிராம மட்ட கள நிலை உத்தியோகத்தர்களின் ஒரு தொகுதியினரே இந்த இரண்டு நாள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
இவர்களுக்காக 200 மணித்தியாலங்களைக் கொண்ட அனர்த்த முகாமைத்துவப் பயிற்சியானது கடந்த 2019ஆம் ஆண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.