ஜெர்மனியில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரிப்பு.

ரஷியா-உக்ரைன் இடையிலான போர் தொடங்கிய பிறகு சர்வதேச நாடுகள் ரஷியா மீது வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்தன. இந்த பொருளாதார தடைகள் காரணமாக ரஷியாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதியை நம்பியிருந்த நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தது. இதன் விளைவாக பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள், எண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை கடுமையாக உயரத் தொடங்கியது.

மேலும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் நுகர்வு பொருட்களின் விலை அதிகரித்ததால், பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஜெர்மனியில் கடந்த ஆகஸ்ட் மாதம் பணவீக்கத்தின் விகிதம் 8.8% ஆக அதிகரித்துள்ளது. இது ஜெர்மனியில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக அளவிலான பணவீக்கம் என்று கூறப்படுகிறது. இதனால் ஐரோப்பிய மத்திய வங்கியின் வட்டி விகிதம் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மனியில் கடந்த மே மாதம் 8.7% ஆகவும், ஜூலை மாதத்தில் 8.5% ஆகவும் இருந்த பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் 8.8% ஆக உயர்ந்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், 2022 இறுதிக்குள் ஜெர்மனியில் பணவீக்கத்தின் சதவீதம் இரட்டை இலக்க எண்கள் வரை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.