பதவி விலக தெ.ஆ. பயிற்சியாளர் முடிவு.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக மார்க் பெளச்சர் முடிவெடுத்துள்ளார்.

2019 டிசம்பர் முதல் தென்னாப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார் முன்னாள் வீரர் மார்க் பெளச்சர். 2023 ஒருநாள் உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக நீடிக்க ஒப்பந்தம் செய்திருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டியுடன் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக பெளச்சர் முடிவெடுத்துள்ளதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறியது, 11 டெஸ்ட் வெற்றிகள், இந்தியாவைச் சொந்த மண்ணில் 2-1 என டெஸ்ட் தொடரில் வீழ்த்தியது, 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தொடர்ச்சியாக 5 வெற்றிகள் என பெளச்சர் பயிற்சியாளராக இருந்த காலக்கட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. எனினும் இங்கிலாந்தில் சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 1-2 என இங்கிலாந்திடம் தோற்றது தெ.ஆ. அணி.

இதையடுத்து தென்னாப்பிரிக்காவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள எஸ்ஏ20 லீக் போட்டியில் எம்ஐ கேப் டவுன் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பெளச்சர் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.