நூறு வீதம் ஜனநாயகம் இல்லை! – மஹிந்த தேசப்பிரிய குற்றச்சாட்டு.

“இலங்கையில் இன்று நூறு சதவீதம் ஜனநாயகம் இல்லை. அரசியல் கட்சிகளுக்குள் உள்ளக ஜனநாயகம் இன்மையே இதற்கான பிரதான காரணியாகும்.”

இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனைத் தெரிவித்த அவர். மேலும் குறிப்பிடுகையில்,

“சிறந்த அறிவுள்ள இளைஞர்கள் காணப்படுகின்ற போதிலும், அவர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை. ஆனால், மறுபுறம் வயதானவர்கள் தொழிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.

60 வயதில் அரச உத்தியோகத்தர்கள் ஓய்வுபெற வேண்டுமெனில், அந்த வயதைக் கடந்த அரசியல்வாதிகள் ஏன் இன்னும் ஓய்வுபெறவில்லை என்பது தற்போதைய பிரபல கோஷமாகவுள்ளது.

இளைஞர்களுக்கு அதிகாரங்கள் கிடைக்கப் பெறாமலுள்ளமைக்கான காரணம் என்ன? அரசியல் கட்சிகளுக்குள் உள்ளக ஜனநாயகம் இன்மையே இதற்கான பிரதான காரணியாகும்.

அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு வரம்பற்ற அதிகாரம் காணப்படுகின்றது. அரசியல் கட்சிகளின் கிளை அலுவலகங்களிலிருந்து இளைஞர்கள் அரசியலுக்குள் உள்வாங்கப்படுவதில்லை.

நேர்முகத்தேர்வுகளின் போது பெண்களையும் உள்ளடக்குமாறு கட்சி ஒன்றின் தலைவரிடம் நான் கோரிக்கை விடுத்தேன். அதற்குப் பதிலளித்த குறித்த நபர் , ‘ஒருவர் அல்ல. 5 பெண்களைக் கூட நேர்முகத்தேர்வை நடத்துவதற்கு நியமிக்க முடியும். ஆனால், இறுதித் தெரிவு எம் கைகளிலேயே உள்ளது’ என்றார்.

நகங்களிலிருந்து தலைமயிர் வரை நாம் ஜனநாயகமுடையவர்களாகக் காணப்பட வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலிலும் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட்டால் கட்சி ஜனநாயகமுடையதாகக் காணப்படும்.

கட்சிகள் ஜனநாயகமுடையவையாக மாற்றமடையும்போது, நாட்டிலும் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படும். வாக்களிப்பது உங்களது உரிமை, எனவே வந்து வாக்களியுங்கள் என்று பிரசாரம் செய்பவர்கள், மறுபுறும் ஏதேனும் செய்தால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என்றும் எச்சரிக்கின்றனர்.

நாட்டில் நூற்றுக்கு நூறு சதவீதம் ஜனநாயகம் இல்லை. இன்று பிரபுக்களின் வாதமே காணப்படுகின்றது. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாம் என்ற கோஷத்துக்குப் பகிரங்கமாக எதிர்ப்பை வெளிப்படுத்தியவன் நான்.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளிட்ட இளைஞர் – யுவதிகளுக்கு ஆதரவாகவே நான் செயற்பட்டேன் என்பதை பலரும் அறிவார்கள். ஆனால், வேட்புமனுக்களை பொறுப்பேற்றவன் நான் எனக் கூறி, எனது வீட்டையும் தாக்குவதற்கும் சிலர் வருகை தந்தனர்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.