இந்தியாவில் சேவையை தொடங்கும் ஹைட்ரஜன் ரயில் – ரயில்வே அமைச்சர் முக்கியத் தகவல்

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களை இந்தியா கட்டமைத்து வருகிறது என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ஒடிஸா மாநிலத்தின், புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து பேசிய அவர், முதலாவது ஹைட்ரஜன் ரயிலானது 2023ஆம் ஆண்டில் சேவையை தொடங்கும் என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே, ஜெர்மனியில் உலகின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அங்கு 14 டீசல் ரயில்களுக்குப் பதிலாக இனி ஹைட்ரஜன் ரயில் மூலம் பசுமை போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது. இந்தியாவிலும் இத்தகைய முயற்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நாட்டின் பல பொருளாதார மண்டலங்களை இணைக்கும் வகையிலான ரயில் போக்குவரத்து கட்டமைப்புக் கொள்கை துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், நாட்டின் தொலைதூர பகுதிகள் மற்றும் பின் தங்கிய பகுதிகள் ஆகியவற்றை இணைப்பதற்கு இந்திய ரயில்வே உறுதி பூண்டுள்ளது.

முற்றிலுமாக இந்திய தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அதிவேக ரயில்களில் ஒன்றாக வந்தே பாரத் ரயிலானது கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித தடங்கலும் இன்றி செயல்பட்டு வருகிறது. சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில், கூடுதலான வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவை வெகு விரைவில் சேவையை தொடங்க உள்ளன’’ என்று கூறினார்.

முன்னதாக, வந்தே பாரத் ரயில்களின் பரிசோதனை ஓட்டம் அண்மையில் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், அவற்றை இயக்குவதற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ரயில் தடங்களின் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம்

புதிய ரயில்களை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், ரயில் தடங்களின் மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் அஸ்வினி தெரிவித்தார். விரைவு ரயில்கள் மற்றும் அதிவிரைவு ரயில்கள் ஆகியவற்றை இயக்கும் வகையில் ரயில் தடங்களை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம். அண்மையில் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் ரயில் சென்றபோது கூட, குவளையில் வைக்கப்பட்டிருந்த நீரில் ஒரு துளி சிந்தும் அளவுக்கு கூட அதிர்வு ஏற்படவில்லை. உலகமே இதைக் கண்டு வியக்கிறது.

வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்து 72 ரயில்களை உற்பத்தி செய்வதற்கான பணிகள் தொடங்க உள்ளன. 0 முதல் 100 கி.மீ. வேகத்தில் பயணிக்க புல்லட் ரயில்கள் கூட 55 நொடிகள் எடுத்துக் கொண்ட நிலையில், வந்தே பாரத் ரயிலானது இந்த வேகத்தை 52 நொடிகளில் எட்டியுள்ளது. வந்தே பாரத் ரயில் அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ. வேகத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது’’ என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.