தமிழினத்தை ஒடுக்கச் சிங்கள பௌத்த மேலாதிக்க அதிகார வர்க்கம் கங்கணம் முன்னாள் எம்.பி. ஶ்ரீநேசன் குற்றச்சாட்டு.

இன, கலாசார வரலாற்று ஆதார அழிப்புகள், நிலப் பறிப்புகள் ஊடாக தமிழினத்தை ஒடுக்கச் சிங்கள பௌத்த மேலாதிக்க அதிகார வர்க்கம் எண்ணுகின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

“இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து இன்றுவரை தமிழர்களின் தாயக நிலத்தைச் சிதைத்து சின்னாபின்னப்படுத்துவதற்கு சிங்கள பௌத்த அதிகார வர்க்கம் நுட்பமாகச் செயற்பட்டு வருகின்றது.

இன்றைய நிலையில் வரலாற்றுப் புகழ்மிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயத்துக்குச் சொந்தமான 18 ஏக்கர்களுக்கும் சற்று அதிகமான காணியைக் கையக்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற ஆலயத்தின் காணியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் ஐயா திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற காலத்தில் அபகரிக்க முயற்சிப்பது இரட்டிப்பான வேதனைகளைத் தமிழர்களுக்கு அளிக்கின்றது.

இதனைத் தடுப்பதற்காக திருக்கோணேஸ்வர ஆலய அறங்காவலர்கள், சைவப்பெருமக்கள், தமிழ்ப் பற்றாளர்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார்கள்.

அதற்கான அரசியல் பலத்தைத் தமிழ் அரசியல்வாதிகள் கொடுக்க வேண்டியது தார்மீகப் பொறுப்பாகும்.

குறிப்பாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் ஐயா இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டியவராக உள்ளார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சம்பந்தர் ஐயா அனுப்பியுள்ளார்.

மேலும் இந்த அரசுடன் இணைந்து செயற்படுகின்ற தமிழ் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தியேயாக வேண்டும்.

கிழக்கிருப்புவாதிகள் என்று மார்தட்டுவோர் திருகோணமலையும் கிழக்கு மாகாணத்துக்குரியது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

கிழக்கின் இராஜாங்க அமைச்சர்கள் தமது ஊருக்குள் தொகுதிகளுக்குள் மாவட்டத்துக்குள் மாத்திரம் என்று தமது பாரிய பொறுப்புகளைச் சுருக்கக் கூடாது.

அவர்கள் சார்ந்த இந்த அரசு அமைச்சுகளைத் தமக்குத் தந்ததால் நன்றியணர்வோடு கைகளை உயர்த்தித் தலைகளை ஆட்டும் பொம்மையர்களாக இருக்கக்கூடாது.

‘எம் கடன் தலையாட்டிக் கையுயர்த்திச் சலுகைகளை அனுபவிப்பது மட்டுமே’ என்ற தாரகமந்திரத்தோடு இவர்கள் செயற்படக்கூடாது.

இதனை மக்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. ‘பேச்சுப் பல்லக்கில் தம்பி கால்நடையில்’ எனபதாக செய்கைகள் இப்படியே இருக்கக்கூடாது.

பேரின அடிப்படைவாத அதிகாரவர்க்க ஆட்சிக்காலங்களில் தமிழின அழிப்புகள், உடைமை அழிப்புகள், தாயக நிலப்பறிப்புகள், கலாசார அடையாள அழிப்புகள், வரலாற்றுத் தடய அழிப்புகள், நினைவுத்தூபி அழிப்புகள், உணர்வு அடக்குமுறைகள் போன்றவையே நடைபெறகின்றன.

இன அழிப்புகளுக்கு 1958,1977,1983,2009 போன்ற பல காலங்களில் நடைபெற்ற கொடூர அழிப்புகள் எடுத்துக்கட்டுகளாக உள்ளன.

இவ்வன்முறைகளால் அழிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இதுவரை உள்நாட்டுப்பொறிமுறைகளால் நீதி வழங்கப்படவில்லை. ஆனால், தம்மிடம் உள்நாட்டுப் பொறிமுறை இருப்பதாக 2009 இல் இருந்து இன்றைய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வரை ஐக்கிய நாடுகள் சபையினை ஏமாற்றி வருகின்றனர்.

தமிழர்களை ஏமாற்றி – முஸலிம்களை ஏமாற்றி – சிங்களவர்களை ஏமாற்றி சர்வதேச சமூகத்தையே ஏமாற்றக்கூடிய நிலைக்கு ஶ்ரீலங்கா ஆட்சியாளர்கள் வந்துள்ளார்கள்.

சர்வதேச ஐக்கிய நாடுகள் சபையும் ஏமாந்து விடக்கூடாது என்பதே தமிழர்களின் ஏகோபித்த கோரிக்கையாகும்.

தாய்மண்ணில் தமிழர்களின் குடித்தொகையைகுறைப்பதற்கு அச்சுறுத்தல் அழிப்பு உத்திகளைக் கையாளும் சிங்கள அதிகார வர்க்கமானது அதன் மூலமாக தமிழர்களை அகதிகளாக்கி ஏறத்தாழ 13 இலட்சம் தமிழர்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்துள்ளது.

தமிழர்களின் இருப்பை இழக்கச் செய்வதில் இன்னுமோர் அதிகார உத்தி தமிழர் தாயக நிலங்களை சட்டரீதியாகவும் சட்டவிரோதமாகவும் அபகரிப்பதாகும்.

இதற்கான சட்டரீதியான உத்திகளாக இருப்பது அபிவிருத்தி, விவசாக்குடியேற்றம், பாதுகாப்பு, உல்லாசப் பயணத்துறை அபிவிருத்தி போன்ற தந்திரோபாயங்களாகும்.

அதற்குரிய நுட்ப நடைமுறைகளாக மகாவலி அபிவிருத்தி, வனவளப்பாதுகாப்பு, வனஜீவராசிகள் பாதுகாப்பு, கரையோரப் பாதுகாப்பு, தொல்லியல் பாதுகாப்பு, அரச காணிகள், காணிச் சீர்திருத்தம், எல்லை மீள்நிருணயம், கடலோரம் இல்லாத மாவட்டங்களுகளைக் கடற்கரைகளோடு இணைத்தல் போன்றவை அமைகின்றன.

இவற்றைவிட சட்ட விரோதமான முறையிலும் குண்டர்களின் அச்சுறுத்தல், இனவழிப்புகள் மூலமாக தமிழர்களின் உறுதிக் காணிகள், ஒப்பக்காணிகள் பறிக்கப்படுகின்றன.

இதற்குத் தமிழர்கள் மீதான சிங்கள அதிகார தரப்பினரதும் கையாட்களினதும் வன்செயல்கள் உதவுகின்றன.

தென்னலங்கையிலுள்ள தமிழர்கள் மட்டுமன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எல்லைக் கிராமங்களின் மக்களும் அழிப்புகள், அச்சுறுத்தல்களால் அகற்றப்பட்டுள்ளனர்.

கல்லோயா, அல்லை கந்தளாய், சேருவில, வெலி ஓயா, பதவியா, சிறிபுர,லங்காபட்டுன போன்ற பெயரகள் சிங்களப் பேரினவாத அபகரிப்புகளின் சான்றுகளாகும்.

இரண்டரை ஆண்டுகள் கால ராஜபக்சக்களின் ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பில் மயிலத்தமடு, மாதவண, கெவுளியாமடு, வடமுனை நெளுக்கல்மலை, வாகரை காரக்காடு போன்ற இடங்கள் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டுள்ளன.

கரடியனாறு குசலானமலை முருகன் கோயில், வேலோடுமலை, தாந்தாமலை, கன்னியா, திருக்கோணேஸ்வர ஆலயக் காணி, முல்லைத்தீவில் வெடுக்குநாறிமலை ஆலயம், குருந்தூர்மலை ஆலயம் போன்றவை சிங்கள பௌத்த தொல்லியல் ஆக்கிரமிப்புப்புக்குள் அல்லது பார்வைக்குள் உட்பட்டுள்ளன.

இவற்றை விடவும் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் முப்படைகளுக்கும் வேண்டிய காணிகள் என்ற அடிப்படையில் பல நூற்றுக்கணகான ஏக்கர் காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.