வகுப்பறையில் மட்டுமே ஹிஜாப் அணிய தடை.. பள்ளி வளாகத்தில் இல்லை – உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா வாதம்

ஹிஜாப் வகுப்பறைகளில் மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளது, பள்ளி வளாகத்திலோ அல்லது பள்ளி பேருந்துகளிலோ அணிவதற்கு தடை இல்லை என ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக அட்வகேட் ஜெனரல் பிரபுலிங் நவத்கி புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கர்நாடகாவில் பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இது தொடர்பான வழக்கில் மாநில அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மாணவிகள் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆடை அணியும் உரிமையை உடனடியாக வழங்க முடியாது. நாங்கள் ஹிஜாபை வெளியில் தடை செய்யவில்லை, பள்ளி போக்குவரத்தில் அதை அணிவதற்கு எந்த தடையும் இல்லை. பள்ளி வளாகத்தில் கூட எந்த தடையும் இல்லை, வகுப்பறைக்குள் மட்டுமே கட்டுப்பாட்டின் தன்மை உள்ளது, ”என்று நீதிபதி ஹேமந்த் குப்தா முன் கர்நாடக சார்பில் வாதாடிய அட்வகேட் ஜெனரல் பிரபுலிங் நவத்கி கூறினார்.

அரசாங்கத்தின் சார்பாக வாதங்களை வைத்த அட்வகேட் ஜெனரல், PFI போன்ற அமைப்புகளின் பங்கை சுட்டிக் காட்டினார், “சில குழுக்கள் தீவிரமாக தொடர்பு கொண்டிருந்தன…” என குறிப்பிட்டார்.

விசாரணையின் போது, ​​கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஹிஜாப் போராட்டங்களில் பிஎஃப்ஐயின் பங்கை வெளிப்படுத்தும் குற்றப்பத்திரிகையை சமர்ப்பிக்குமாறு அட்வகேட் ஜெனரலிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

ஹிஜாப் ஒரு அத்தியாவசிய நடைமுறை அல்ல என்றும், அரசியலமைப்பு ரீதியாக இஸ்லாமிய நாடுகளில் உள்ள பெண்கள் கூட ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்’ என கர்நாடக அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தின்போது குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.