வாட்ஸ்ஆப், ஜூம், ஸ்கைப் செயலிகளுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடு : மத்திய அரசின் அதிரடி திட்டம்!

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் புதிதாக ‘தொலைத்தொடர்பு மசோதா 2022-ஐ உருவாக்கி சட்டமாக இயற்றி அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாவுக்கான வரைவை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் பொதுமக்கள் தங்களுடையை ஆலோசனைகள் கருத்துகளை வழங்கலாம் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் ஆலோசனை வழங்க வரும் அக்டோபர் 20 கடைசி நாள் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதா வரைவின் முக்கிய அம்சங்கள் தெரியவந்துள்ளன. அதன்படி, புதிய தொலைத்தொடர்பு மசோதாவில் ஓடிடி இணைய தொலைத்தொடர்பு சேவைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே வாட்ஸ் ஆப், ஜூம், ஸ்கைப் போன்ற இணைய வழி அழைப்பு (இன்டெர்னெட் கால்) சேவைகளை வழங்க மத்திய அமைச்சகத்திடம் உரிமம் பெற வேண்டும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனங்கள் சேவைக்கான உரிமம் பெறுவதை ஊக்குவிக்க கட்டணத்தில் தள்ளுபடிகள் செய்து தரப்படும். என்ட்ரி கட்டணம், உரிமக் கட்டணம், பதிவுக் கட்டணம் இன்ன பிற கட்டணங்கள், வட்டி, கூடுதல் கட்டணம், அபராதத் தொகை போன்றவற்றை நிறுவனங்கள் செல்ல வேண்டி வரும். இவற்றில் பாதி அல்லது முழு தொகையை தள்ளுபடி செய்து தர அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக வரைவில் கூறியுள்ளது.

தொலைத்தொடர்பு அல்லது இணைய சேவை நிறுவனங்கள் சேவையை நிறுத்திக்கொள்வதாக உரிமத்தை திரும்ப ஒப்படைத்தால் அவர்களுக்கு கட்டணம் திருப்பித் தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற ஊடகங்களில் இந்தியாவுக்குள் பத்திரிக்கை செய்திகளை வெளியிடுவதற்கு அரசு ஆய்வு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

அதேவேளை, தேச பாதுகாப்பு, இறையாண்மை போன்ற அம்சங்களில் இந்த விலக்கானது பொருந்தாதது. தொலைத்தொடர்புத் துறையில் நவீன மற்றும் எதிர்காலத்துக்குத் தேவையான சட்டங்களை உருவாக்கவே, இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் மசோதா தொடர்பாக பொதுமக்களின் கருத்தை கேட்பதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு அமைச்சகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.