2023-ல் மீீண்டும் ஆட்சியை பிடிப்பதே இலக்கு – சச்சின் பைலட்

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் குழப்பமான சூழல் உருவாகியுள்ள நிலையில், கட்சித் தலைவர் சோனியா காந்தியை சச்சின் பைலட் சந்தித்து பேசினார். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலமான ராஜஸ்தானில் உருவாகியுள்ள பரபரப்பான சூழலுக்கு மத்தியில் சோனியா காந்தி – சச்சின் பைலட் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வரும் அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சருமான அசோக் கெலாட் அறிவித்திருந்தார். காங்கிரஸ் தலைவராக அசோக் கெலாட் தேர்வாகும் பட்சத்தில் முதலமைச்சர் பதவியில் ராஜஸ்தானின் அடுத்த முதலமைச்சராக சச்சின் பைலட் தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் நகர்வுகள் மேற்கொண்டன.

ஆனால், எதிர்பாராத விதமாக அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் கட்சியின் நகர்வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். சச்சின் பைலட்டையோ அவரது ஆதரவாளர்களையோ முதலமைச்சராகக் கூடாது என கெலாட் தரப்பு எம்எல்ஏக்கள் சுமார் 80 பேர் ராஜினாமா செய்வதாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. இதனால் பெரும் குழப்பம் நிலவியதால், இந்த சூழலுக்கு தார்மீக பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக அசோக் கெலாட் அறிவித்தார்.

இந்த பரபரப்பான பின்னணிக்கு மத்தியில் தான் சச்சின் பைலட் சோனியா காந்தியை சந்தித்துள்ளார். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட் கூறுகையில், “எங்களது நோக்கம் இன்னும் 10-12 மாதத்தில் வரப்போகும் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பதே.

ராஜஸ்தானில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை காங்கிரசும் பாஜகவும் மாறி மாறி தான் ஆட்சிக்கு வருகின்றன. ஏன் காங்கிரஸால் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க முடியாது. கடுமையாக உழைத்து 2023இல் மீண்டும் வெற்றி பெறுவதே எங்கள் பிரதான நோக்கம். அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்றார். எனவே, ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட்டே தற்போதைக்கு தொடர்வார்” எனக் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.