அண்ணல் காந்தி பிறந்தாளில் காதி, கைவினை பொருட்களை வாங்கி அஞ்சலி செலுத்துவோம்.. பிரதமர் மோடி அழைப்பு!

அக்டோபர் 2ஆம் தேதியான இன்று காந்தியின் 153ஆவது பிறந்தநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சர்வதேச அகிம்சை தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், “அண்ணல் காந்தியின் பாதையில் பயணித்து நாம் அமைதி, சமத்துவம் மற்றும் ஒற்றுமையை நமக்குள் உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளர். அத்துடன் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் முர்மு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர் தனது வாழ்த்து செய்தியில், “நவீன இந்தியாவின் எழுச்சியூட்டும் ஆளுமைகளில் ஒருவரான மகாத்மா காந்தி, இது போன்ற சவாலான தருணங்களில் ஒட்டுமொத்த மனித சமூகத்தின் வழிகாட்டியாகவும், நம்பிக்கையாகவும் தொடர்ந்து நீடிக்கிறார். உண்மையின் மீதான காந்தி அவர்களின் நம்பிக்கையும், மனிதர்களிடம் நல்லுணர்வும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது” என்றுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியும் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில், இந்த வருடம் காந்தி ஜெயந்தி கூடுதல் சிறப்பு வாய்ந்தது. காரணம், இந்தியா தனது 75ஆவது சுதந்திர தினத்தை இந்தாண்டு விடுதலையின் அமுதப் பெருவிழாவாக விமரிசையாக கொண்டாடி வருகிறது. எனவே நாம் அண்ணல் காந்தியின் கொள்கைகளை பின்பற்றுவோம். காதி மற்றும் கைவினை பொருட்களை வாங்கி அவருக்கு அஞ்சலி செலுத்துவோம் என்றார்.

பாரத் ஜோடோ யாத்திரை பயணத்திற்காக கர்நாடகாவில் உள்ள ராகுல் காந்தி, அங்கு அண்ணல் காந்திக்கு மரியாதை செலுத்தி பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றார். அண்ணல் காந்தியின் வழியில் உண்மை, அகிம்சை என்ற கொள்கைகளை பின்பற்றி, அன்பு, கருணை, சமத்துவம், மனிதநேயம் ஆகிய பண்புகளை நாம் கைக்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.