ஆசிரியையான ஒரு பிள்ளையின் தாயே சாய்ந்தமருதுக் கடலில் சடலமாக மீட்பு! – பொலிஸார் தீவிர விசாரணை.

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இன்று காலை கடலில் மிதந்து வந்த சடலத்தைக் கடற்படையினரின் உதவியுடன் சாய்ந்தமருதுப் பொலிஸார் மீட்டிருந்தனர்.

குறித்த சடலம் அடையாளம் காணப்படாதிருந்த நிலையில் பொதுமக்களின் உதவியைப் பொலிஸார் கோரியிருந்தனர். அத்துடன் ஊடகங்கள் பலவற்றிலும் செய்திகள் பிரசுரமாகி இருந்தன.

இதைத் தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் இன்று மாலை சடலத்தை அடையாளம் காட்டினர்.

சடலமாக மீட்கப்பட்டவர் அம்பாறை மாவட்டம், காரைதீவு பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஆறுமுகம் வனிதா என்ற ஒரு பிள்ளையின் தாயார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஓர் ஆசிரியராவார்.

இந்த மரணம் தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.