வடகொரியாவுக்கு பதிலடி… எல்லைப் பகுதிக்கு 30 போர் விமானங்களை அனுப்பி மிரட்டிய தென்கொரியா.

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது.

ஜப்பான் கடற்பகுதி மீது கடந்த 1-ந்தேதி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை நடத்தியது. இன்று கிழக்கு கடல் பகுதியில் இருந்து 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து வடகொரியா 12 போர் விமானங்களை அனுப்பியதால் பதற்றம் உருவானது.

இதற்கு பதிலடியாக எல்லையில் தென்கொரியா 30 போர் விமானங்களை அனுப்பியது பதற்ற சூழலை அதிகரித்துள்ளது. இதுபற்றி தென்கொரிய ராணுவம் கூறும்போது, பரஸ்பர எல்லை பகுதியருகே வடகொரியா, 8 போர் விமானங்கள் மற்றும் 4 குண்டுவீச்சு விமானங்கள் என 12 போர் விமானங்களை அனுப்பியது.

வானில் இருந்து தரையை நோக்கி தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சிகளை வடகொரிய விமானங்கள் நடத்தக் கூடும் என நம்பப்படுகிறது. எனவே, அதற்கு பதிலடி தரும் வகையில் எங்களது 30 போர் விமானங்களை எல்லையையொட்டிய பகுதிக்கு அனுப்பியுள்ளோம் என தெரிவித்து உள்ளது.

வடகொரியாவின் தூண்டுதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் உறுதியான நடவடிக்கையின் ஒரு முயற்சியாகவே இந்த போர் விமானங்கள் அனுப்பப்பட்டன எனவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்து உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.