இராவணமேனன் இறந்து போனான்

இராவணமேனன் இறந்து போனான்
பழுத்த ஓலைகள் இங்கிருக்க குருத்தோலைகள் உதிர்கின்றனவே

நேற்று காலை தேனூர் என அழைக்க்கப்படும் தேற்றாத்தீவு சென்றேன், அது எனது மேனன் வீடு.

நான் வழமையாகச் செல்லும் இடம். மேனன் அக்கா கிருஸ்ணவேணியின் வீடும் கூட. மேனன் அக்கா கிருஸ்ணவேணி இராவணேசனில் எடுத்துரைஞராக இலக்குமணனாக, மண்டோதரியாக நடித்தவள் அவளது கணவர் விவானந்த ராஜா ஒரு காலத்தில் அதில் இலக்குமணனாக நடித்தவர் இவ்வகையில் அது இராவணேசன் நாடகக் குடும்ப வீடு

வீடு இன்னும் மரண அலங்காரம் பெறவில்லை
வாசலில் மரணவீடு என்பதனை காட்டும் ஓர் வெள்ளைக்கொடி பறந்துகொண்டிருந்தது

என்றும் மகிழ்ச்சியில் கலகலப்பாக இருக்கும் அச்சூழல், சோகம் கவிந்து ஒப்பாரியாலும் அழுகையாலும் நிறைந்திருந்தது

நான் வழமையாகச் செல்லும் கலப்பான அந்த இடம் இன்று வேறு தோற்றம் காட்டியது

மேனனின் மைத்துனர் விவானந்தராஜா என்கையை இறுகப் பற்றிக் கொண்டார், உள்ளே அழைத்துச்சென்றார்
உள்ளே மேனனின் அக்கா கிருஸ்ணவேணி அவளைச் சூழ விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக பணிப்பாளர் புளோரன்ஸ்கென்னடி மற்றும் இசைவிரிவுரையாளர் பிரியஜதீஸ்வரன்( இராவணேசனின் இசைப் பொறுப்பாளருள் ஒருவர் )
மற்றும் இராவ்ணேசனின் ஒருகாலகட்ட மண் டோதரியும் மேனனையும் கிருஸ்ணவேணியையும் நாடகத்துள்ளும் கூத்துள்ளும் இழுத்துக்கொணர்ந்த மேனைத் தூக்கி வளர்த்த அவனது மாமியார் பரமேஸ்வரி

ஆம் இராவ்ணேசக் குடும்ப வீடு அது,

மேனன் நாம் தயாரித்த இராவணேசனின் இறுதியாக இராவணனாக நடித்த மாணவன்
தனது கம்பீரநடிப்பால் அனைவரையும் கவர்ந்தவன்

முதல் நாள் போரில் வீரத்துடன் போரிட்டு அனைத்தையும் இழந்து வெறும்கையோடு அவன் இலங்கை மீழுதல் , சோர்வு நீங்கி மீண்டு படை அனுப்புதல் …. தோல்வி மேல் தோல்வியால் குமுறுதல் அதனால் வரும் அவனது பெரும் மன அவஸ்தை இறுதியில் இன்றுளார் நாளை மாழ்வார் எனக்கூறி இறுதிப்போர்க் களம் செல்தல்

அவனது போர் முழக்கம்
வீரப்போர்
வீழ்ச்சி
என ஒத்திகையிலும் முக்கியமாக மேடையிலும் அவன் நடித்துகொண்டிருக்கையில் இசைக்குழுவில் முர்சு முழக்குனராக அமர்ந்திருக்கும்நான் என் செயல் மறந்து ரசித்திருப்பேன்

பாத்திரத்தோடு ஒன்றி நடிப்பான்

என்னைக் கணடதும் ஓவென அலறிய கிருணவேணியின் ஒப்பாரியில் இவை ஒவ்வொன்றாக வந்தன

எரிகிற துயரம் எனும் திரியில் மேலும் மேலும் எண்ணை ஊற்றும் வார்த்தைகள்

முரட்டு வீர ராவணனாக மேடையில் கலக்கும் அவன் இயல்பில் மென்மையும் குழந்தை மனமும் இங்கிதமான பேச்சும் பிறர் துயர்கண்டு உருகும் இயல்பும் கொண்ட குழந்தை மனதினன் கள்ளம் கபடம் அறியாதவன்

அப்படியா சேர் என அகலவிரியும் அவன் கண்களில் ஓர் அப்பாவித்தனம் தெரியும்

முதன் முதலாக பாடசாலை மாணவப்பருவத்தில் பாடசாலை இராவணனாக நடித்த இவனை எனக்கு அறிமுகம்செய்து வைத்தவர் அவனது மமியார் பரமேஸ்வரி

பின்னால் அந்த நாடகத்தில் அவன் பிற்பாட்டுக்காரனாக அறிமுகமாகி , இலக்குமணனாக வளர்ந்து இராவணனாக உய்ர்ந்தான்
பின் நான் தயாரித்த அனைத்து நிகழ்வுகளிலும் பிரதான இடம் கொண்டான்,எனக்கோர் வலது கரமாக விளங்கினான்
அவனது உடல் இன்னும் இலங்கை வந்து சேரவில்லை.

இந்தியாவில் இருந்து அது வரவேண்டும்

இசையில் முதுகலை பட்டம் பெற அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்றான்

புல்லாங்குழல் பயின்றான்

இடையில் ஒரு நாள் வீடு வந்து அரகுறைபயிற்சி சேர் என சங்கோசத்துடன் கூறி வாசித்துக்காட்டிசென்றான்

எனக்கு அது அரைகுறையாகத் தோன்றவில்லை
பழகும் எதிலும் அவன் காட்டும் தீவிரமே தெரிந்தது

விரைவில் பட்டம் பெற இருந்தான்

நாளை பட்டம் பெறாமல் எல்லாம் அங்கு விட்டு விட்டு வெறுங்கையுடன் அவன் உடல் இலங்கை வருகிறது

வீரமும் களத்தே போட்டு வெறுன்கையோடு இலங்கை சென்றான்
என்ற அந்த இராவணேசப் பாடல் வரிகளே ஞாபகம் வருகின்றன

சேர் என் தம்பி நாளை வெறுங்கையோடு நாளை இலங்கை வருகிறானே எனக் கிருஸ்ணவேணி கூவிம் அழுத குரல் இப்போதும் மனதைக் குடைகிறதே நாம் அனைவரும் எல்லாம் இங்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு வெறுங்கையுடன்தானம்மா இறுதியில் போகிறோம் என அவளுக்கும் அவனை நினைத்தேங்கும் அனைவருக்கும் ஓர் ஆறுதல் அளிப்பதல்லால் வேறு என்ன செய்ய முடியும்?

நான் ஓர் பெரும் துணை இழந்தேன்
எனது வலக்கரங்களுள் ஒன்று போனது

மகனை இழந்தது போன்ற சோகமும் துயரமும் மனதைச்சூழ்ந்து கிடக்கிறது
மேனா நீ என்றும் என் மனதில் இருப்பாயடா

பழுத்துப்போன ஓலைகள் இங்கிருக்கக் குருத்தோலைகள் உதிர்கின்றனவே


 

 

 


– மௌனகுரு

 

அன்னாருக்கு  சிலோன் மிரரின் கண்ணீர் அஞ்சலிகள்

Leave A Reply

Your email address will not be published.