இனப்பிரச்சினைக்குச் சமஷ்டியே தீர்வு! – நாடாளுமன்றில் கூட்டமைப்பு தெரிவிப்பு.

அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சமஷ்டியே இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நீதித்துறை தொடர்பான திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்போவதாக நீதி அமைச்சர் பொது வெளியில் கூறுகின்றார். அந்த எண்ணம் வரவேற்கத்தக்கதே. இதற்காக அனைத்துக் கட்சிகளையும் அழைத்து அந்தப் பேச்சைத் தொடங்க வேண்டும்.

எங்களுடைய தீர்வானது அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சமஷ்டியாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினர் 100 நாள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறைமையிலான அதிகாரப் பகிர்வைத் தர வேண்டும் என்று 100 நாள் வேலைத்திட்டத்தின் இறுதி நாளில் அவர்கள் மக்கள் பிரகடனத்தை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாண சபைத் தேர்தலை நடத்தி, மாகாண சபை முறைமையை அதிகாரத்துடன் செய்ய வேண்டும்.

அரசின் நல்லிணக்கத்தின் கீழ் பொதுமன்னிப்பின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது நல்லிணக்கத்தையே காட்டுகின்றது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கும் காலம் தாழ்த்தாது தீர்வு காணப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.