ராஜீவ் காந்தி வழக்கில் விடுதலையான இலங்கையர்கள் விஸாவுக்கு விண்ணப்பித்தாலே அரசின் முடிவு தெரியும்?

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான இலங்கையர்கள், இலங்கைக்கு வருவதற்கான விஸாவுக்கு விண்ணப்பித்தாலே அவர்கள் தொடர்பில் அரசு ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவர்களில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ரொபேர்ட் பயஸ் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு அரசு அனுமதிக்குமா? அவர்கள் நாட்டுக்குள் திரும்பினால் கைது செய்யப்படுவார்களா? என்பது தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் ஊடகம் ஒன்றால் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கும் போது,

“இலங்கைப் பிரஜைகள் இன்னொரு நாட்டில் குற்றம் செய்து தண்டனையைப் பெற்று அந்நாட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தால் அவர்கள் நாடு திரும்புவதில் எந்தத் தடையும் இல்லை.

ஆனால், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் என்றபடியால் அவர்கள் தற்போது நாடு திரும்ப முடியுமா என்பது தொடர்பில் அரசு ஆராய்ந்து முடிவெடுக்கும்.

அவர்கள் நாடு திரும்ப விரும்பினால் – அதற்கான அனுமதியைக் கேட்டு அவர்கள் விண்ணப்பித்தால் அரசின் பதிலும் வெளியாகும். இதைவிட மேலதிக கருத்துக்கள் எதனையும் சொல்ல நான் விரும்பவில்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.