சகல தமிழ்த் தேசியக் கட்சிகளுமே ஒற்றுமையில் உறுதியாக உள்ளன! – திடமாகக் கூறுகின்றார் சாணக்கியன்.

“ஒற்றுமை என்ற விடயத்தில் ஏனைய கட்சிகளை விட தமிழ்த் தேசியக் கட்சிகள் பலமாகவுள்ளன. சமஷ்டி அடிப்படையிலான தீர்வுதான் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் என்பதை கஜேந்திரகுமார் உட்பட அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒற்றுமையாக இணைந்து ஓர் ஆவணத்தை எழுத்தில் வழங்க முடியும். அத்தகைய ஒற்றுமையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளன.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

“ஒற்றுமை என்னும் விடயத்தில் சிங்களக் கட்சிகளை விட தமிழ்த் தேசியக் கட்சிகள் பலமாகவுள்ளன. ஒற்றுமை என்னும் விடயத்தில் பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் சில சுயநலவாதிகள் மட்டுமே தமிழர்களுக்குள் ஒற்றுமையில்லை எனக் கூறி தமிழ் மக்களுக்குள் பிரிவினையைக் காட்ட முனைகின்றனர்.” – என்றும் அவர் குறிப்பிடடார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான தந்தை செல்வாவின் 128 ஆவது ஜனன தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் நேற்று நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மண்முனை வடக்கு கிளையின் தலைவரும் மட்டக்களப்பு மாநகர சபையின் மேயருமான சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன். இ.சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார், தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை தலைவர் க.சோபனன், மகளிர் அணியின் உப தலைவியும் மாநகர சபை உறுப்பினருமான த.கௌரி மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மாநகர சபையின் உறுப்பினர்கள். பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் விசேடமாக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ந.புஸ்பராசாவினால் தந்தை செல்வா தொடர்பிலான சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரையும் இடம்பெற்றது.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூறியவை வருமாறு:-

“தந்தை செல்வா காலத்தில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட்ட பலர் இன்னும் இந்த மாவட்டத்தில் இருக்கின்றார்கள். தமிழரசுக் கட்சியில் எனது பாட்டனார் சீ.மு.இராசமாணிக்கம் ஐயா தலைவராகயிருக்கும்போது தந்தை செல்வா இந்த மாவட்டத்திற்கு தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்ட சமயம், இராசமாணிக்கம் ஐயா தேர்தல் பரப்புரைக்குப் போககூடாது எனவும், அவர்களுக்கு செருப்புமாலை போடவேண்டும் எனவும் பேசியவர்கள் எல்லாம் இன்று இந்த மாவட்டத்தில் தமிழ்த் தேசியவாதிகளாகப் பலரால் காட்டப்படுகின்றார்கள்.

ஆனால் உண்மையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் அந்தக் காலம் தொடக்கம் இந்த காலம் வரையில் தமிழரசுக் கட்சியையும் வளர்த்து, இளைஞர் பேரவையுடன் இருந்தவர்களைக் கேட்டால் ‘தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்பதை தந்தை செல்வா எதற்காகச் சொன்னார் என்று அவர்கள் பதில் கூறுவார்கள்.

நாங்கள் எமது நிலத்தைப் பாதுகாப்பது என்றால் ஓர் அரசமைப்பின் ஊடாக அதிகாரம் தமிழ் மக்களின் கைகளில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மாத்திரம்தான் எமது நிலத்தை நாங்கள் பாதுகாக்க முடியும். இல்லாதுவிட்டால் எங்காவது காணிகளை பாதுகாக்க ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தே தடுக்க வேண்டிய நிலையிருக்கின்றது.

நாங்கள் பொருளாதாரத்தால் பலமடையும்போதே எமது இளைஞர்களை இங்கு தக்க வைக்க முடியும். இன்று இந்த நாட்டில் இளைஞர்கள் வாழக்கூடிய சூழ்நிலையில்லை. இன்று மின்சாரக் கட்டணம் அதிகரிக்கின்றது, உலக சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி நிலையில் இன்று எரிபொருள் விலை அதிகரித்திருக்கின்றது. பொருள்களின் விலைகள் அதிகரிக்கப்படுகின்றபோதிலும் அதற்கு நிகராக சம்பளம் அதிகரிக்குமா என்பதே சந்தேகமே.

நாங்கள் மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்து வலியுறுத்தி வருவதற்கான முக்கிய காரணம் மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் ஆளுநரின் ஆளுகைக்குள் இல்லாமல் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் கீழ் மாகாண சபை இருக்கும். உள்ளூராட்சி மன்றங்களை இயங்க வைப்பதற்கு ஆளுநரோ, மாகாண சபையோ தடையாக இருக்காது. அதற்காகவே மாகாண சபைத் தேர்தலை நடாத்துமாறு கோருகின்றோம்.

உடனடியாகப் பறிக்கக்கூடிய பழமாக மாகாண சபையும், ஏணி வைத்து ஏறி நாங்கள் பறிக்கக் கூடிய பழமாக புதிய அரசமைப்பும் இருக்கின்றன. அதனை நாங்கள் முன்னெடுப்போம். மண்ணையும் மக்களையும் பாதுகாப்பதாக இருந்தால் நாங்கள் எங்களது நீண்டகால இலக்கான புதிய அரசமைப்பை அடைந்தால் மாத்திரம்தான் அதனைச் செய்ய முடியும்.

ஒற்றுமையைப் பற்றி பேசும்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலானவர்கள் உறுதியாகயிருந்தார்கள். வட்டாரங்களைப் பங்காளிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்காத நிலைமைகள் காணப்பட்டன. தவிசாளர், பிரதி தவிசாளர்கள் பங்காளிக் கட்சிக்கு விட்டுக் கொடுக்க முடியாத நிலைமைகள் காணப்பட்டன. பிரிந்து கேட்டபோதும் வடக்கில் பல இடங்களில் இணைந்து ஆட்சியமைத்தோம்.

இன்று ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறுகின்ற சிலர் மறுபுறத்தல் இவர்தான் ஒட்டுக்குழுக்களை இணைக்கின்றார், இவர்தான் மீண்டும் ஒட்டுக்குழுக்களுடன் பயணிக்கப் பார்க்கின்றார் என்று கூறி வருகின்றனர். தங்களுக்குத் தங்களுக்கு தேவை வரும்போது சேர்ந்து இயங்க வேண்டும், தங்களுக்குத் தேவையில்லாதபோது சேர்ந்து செயற்படக்கூடாது எனப் பேசுகின்றார்கள். பங்காளிக் கட்சிகளுக்கு எதுவும் வழங்கப்படக் கூடாது, ஆனால் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்று உபதேசிப்பார்கள். இதுவே சிலரது செயற்பாடாகவுள்ளது.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தையில் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்தால் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் – கஜேந்திரகுமாரின் கட்சியை தவிர – அனைவரும் ஒரு குடையின் கீழ் வந்துவிடுவார்கள்.

சிலரின் நடவடிக்கைகளினால் அவர்கள் பிரிந்திருக்கின்றார்கள் என்றால், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. சிங்களக் கட்சிகளை விட, தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றார்கள். நாளை உங்களது கட்சிகளின் தீர்வு திட்டம் என்ன என்று கேட்டால் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து தமிழத் தேசியம் சார்ந்த அரசியல் கட்சிகளும் ஒரு வரியில் ஒன்றாவோம். சமஷ்டி அடைப்படையிலான தீர்வுதான் தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற கோட்டின் அனைத்து கட்சிகளும் ஒன்று சேரும்.

நாங்கள் ஒன்றுபட்டு சமஷ்டிதான் தமிழ் மக்களுக்கான தீர்வு என்றால் கஜேந்திரகுமார் உட்பட அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றாகச் சேரலாம். ஏனைய கட்சிகளை விட தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றாகவே செயற்படுகின்றது. பிரிவினைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சுயநலவாதிகள் மாத்திரம்தான் தமிழ் மக்களுக்குள் ஒற்றுமையில்லையென்று சொல்லிச் சொல்லியே ஒரு பிரிந்து நிற்கும் இனமாகத் தமிழர்களை காட்டுவதற்கு முயற்சிக்கின்றார்கள்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.