வெட்கம் கெட்ட ராஜபக்ச அரசு உடன் பதவி விலக வேண்டும்! – எதிரணி வலியுறுத்து.

நாட்டு மக்கள் முன்னிலையில் வெட்கித் தலைகுனிந்துள்ள ராஜபக்ச அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தவேளை அது தவறான நடவடிக்கை என எதிரணியாகிய நாம் சுட்டிக்காட்டினோம். திருத்தங்களை முன்வைத்தோம். ஆனால், எமது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றைய அரசியல் நெருக்கடி நிலைக்கு இந்த 20ஆவது திருத்தமும் பிரதான காரணமாகும்.

நாடாளுமன்றம் வசம் இருந்த அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் உள்ள நிலையில், நாடாளுமன்றத்தால் எவ்வாறு தீர்வைத் தேட முடியும் என்பதை சபாநாயகர் புரிந்துகொள்ள வேண்டும்.

தற்போது 20 ஐ இல்லாதொழிக்க முற்படுகின்றனர். இது காலம் கடந்த ஞானம். எனவே, புதிய அரசு அமைந்தால்தான் பிரச்சினைக்குத் தீர்வைத் தேட முடியும்.

இந்த அரசுக்கு சர்வதேச ஒத்துழைப்பு கிடைக்காது. எனவே, புதிய அரசு அமைந்தால்தான் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறக்கூடியதாக இருக்கும்.

புதிய அரசு அமைய வழிவிட்டு இந்த அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.