ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரை குறிவைத்து தலீபான்கள் அதிரடி தாக்குதல் – 8 பேர் கொன்று குவிப்பு.

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், அமெரிக்கா, நேட்டோ படைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து அங்கு எந்த நேரமும் துப்பாக்கியும், கையுமாக திரிகிற தலீபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது முதல் அவர்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் (கோரசன்) சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார்கள். அங்கு அவர்கள் தொடர்ந்து நாசவேலைகளை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக, தலீபான் ரோந்து படையினர் மற்றும் ஷியா பிரிவினர் மீது அவர்கள் தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.

புத்தாண்டு தினத்தன்று தலைநகர் காபூலில் ராணுவ விமான நிலையத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடி அருகே பயங்கரமான குண்டுவெடிப்பினை நடத்தி சிலரை கொன்று குவித்ததுடன், பலரை படுகாயப்படுத்தினர். டிசம்பர் மாதத்தின் மத்தியில் சீனர்களின் காபூல் லாங்கன் ஓட்டலிலும் தாக்குதல் நடத்தினார்கள்.

இவ்விரு தாக்குதல்களையும் தாங்கள்தான் நடத்தியதாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் ஒப்புக்கொண்டனர். இவ்விரு முக்கிய தாக்குதல்களில் பெரும்பங்கு வகித்த அப்துல் ஜப்பார் என்ற பயங்கரவாதியின் படத்தையும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு வெளியிட்டது. இது தலீபான்களுக்கு பெருத்த தலைவலியாக அமைந்துள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட தாக்குதல்களில் தொடர்புடைய ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு தலைநகர் காபூர் மற்றும் நிம்ராஸ் மாகாணத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் பதுங்கி இருப்பதாக தலீபான்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த அதிரடி முடிவு எடுத்தனர். அதன்படி, தலைநகர் காபூலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் தலீபான்கள் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வெளிநாட்டினர் உள்ளிட்ட 8 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 7 பயங்கரவாதிகள் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டனர். இதே போன்று நிம்ராஸ் மாகாணத்தில் நடத்திய அதிரடி நடவடிக்கையில் 2 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகள், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு பலத்த பின்னடைவாக அமைந்துள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரை குறிவைத்து நடத்திய தாக்குதல்களை உறுதி செய்து தலீபான்கள் அரசின் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித், காபூலில் நேற்று கூறியதாவது:- “காபூலில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில், சீனர்களின் லாங்கன் ஓட்டல் தாக்குதலில் தொடர்புடைய ஐ.எஸ். அமைப்பினர் 8 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், வெளிநாட்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் ஆப்கானிஸ்தானில் நுழைவதற்கு வழிவிட்டவர்கள் ஆவார்கள். ஆயுதங்கள், கையெறி குண்டுகள், கண்ணி வெடிகள், வெடிகுண்டுகள் பதிக்கப்பட்ட பெல்ட்டுகள், வெடிமருந்துகள் ஆகியவை ஷாஹ்தாய் சலேஹின் என்ற இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.” இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.