2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொன்ற தாய், ஆபத்தான நிலையில் …(வீடியோ)

இரத்தினபுரி தோட்டம் ஒன்றில் ஏழு மற்றும் ஒரு வயதுடைய இரண்டு குழந்தைகளின் சடலங்கள் இன்று (19) கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இரத்தினபுரி கரபிஞ்சா பகுதியில் உள்ள சென்ட் ஜோகிம் தோட்டத்தில் இருந்தே இந்த இரண்டு குழந்தைகளின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன.

சென்ட் ஜோகிம் தோட்டத்தின் 4ஆம் இலக்க வீட்டில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகளின் தாயார் அதிகளவு பராசிட்டமோல் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதுடன், அவரும் ஆபத்தான நிலையில் இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதன்படி தாயே இரண்டு குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இரண்டு குழந்தைகளும் கிணற்றில் விழுந்த போது, ​​அவர்களை தூக்கி அருகில் உள்ள முட்புதரில் விட்டதாக தாய் பொலிஸாரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இறந்த குழந்தைகளின் உறவினர்,

“நேற்று 2.45 மணியளவில் குளிக்கச் சென்றார். அக்கா குளிச்சிட்டு வாங்க கோவிலுக்கு போகலாம் என்றார். அப்போது குளித்த சின்னவனை துடைத்துக் கொண்டிருந்தார். பெரியவன் குளித்துக் கொண்டிருந்தான். துணிகளை எடுத்துக்கொண்டு வந்துவிட்டதாகச் சொன்னார். ஏன் துணி கொண்டு வந்தாய் என்று கேட்டேன். கோயில் போக அணிய வேண்டும் என்றார். வீட்டுக்குப் போய் குளித்துவிட்டு வரும்போது , பக்கத்து வீட்டுப் பாட்டி, குழந்தைகளின் துணிகளோடு , இரண்டு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு செல்வதாகச் சொன்னாள். அதன் பிறகு நாங்கள் ஓடி வந்தோம். ஓடி வந்து பார்த்தபோது தாய் தூங்கிக் கொண்டிருந்தாள். இரண்டு குழந்தைகளும் இறந்து போய் இருந்தன.”

இறந்த குழந்தைகளின் தந்தை ,
“ஒரு பிரச்சனை இல்லை சேர்… கல்யாணம் ஆகி மூத்த மகன் பிறந்த போது ஒரே ஒரு தடவை அடித்துள்ளேன். இந்த பெண்ணை இன்று வரை அடித்ததேயில்லை சார்.. நான் என் அம்மாவை போல நடத்தினேன் சேர்…” தெரிவித்துள்ளார்.

தனது இரண்டு பிள்ளைகளும் கிணற்றில் விழுந்ததாகவும், தான் அவர்களை தூக்கி அருகில் உள்ள காட்டில் வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்தபோதும் , அவரது வாக்குமூலம் சந்தேகத்திற்குரியது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், குழந்தைகளின் பெற்றோருக்கு இடையே தகராறு இருந்ததாக போலீசாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.