இந்த அரசால் எங்களை அடக்கிவிடவே முடியாது! – அநுர சூளுரை (Photos /Video)

“உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போடுவதன் மூலம் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியை – ஒட்டுமொத்த நாட்டு மக்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்தலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு நினைக்கக்கூடாது. இந்த அரசால் எங்களை அடக்கிவிடவே முடியாது.”

– இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

‘தேர்தலைப் பிற்போடுகின்ற சூழ்ச்சிக்கு எதிரான எதிர்ப்பு’ என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இன்று (26) அரசுக்கு எதிராகப் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அநுரகுமார எம்.பி. உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனநாயக உரிமையான வாக்குரிமையை மக்களிடமிருந்து ரணில் விக்கிரமசிங்க பறித்தெடுத்துள்ளார். நாட்டில் வாழும் அனைத்து மக்கள் முன்னிலையிலும் அவர் இன்று செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எமக்கு வடக்கா, கிழக்கா, தெற்கா, மேற்கா என்று எவ்வித பிரச்சினையும் இல்லை.

எவ்வித பேதமும் இன்றி மக்கள் முன்னிலையில் எம்மால் செல்ல முடியும். மக்களை ஒன்றுதிரட்டவும் எம்மால் முடியும். ரணில் அரசால் இதைச் செய்ய முடியுமா?

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்று 8 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்தக் காலப்பகுதியில் நூறு மக்களையாவது திரட்டி ஏதாவது ஒரு கூட்டத்தை அவர் நடத்தினரா?

ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று நாட்டின் அனைத்துப் பகுதிகளும் தடை செய்யப்பட்ட பூமியாகிவிட்டது. நாட்டினதும் மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவரால் முடியாது” – என்றார்.


default

default

Leave A Reply

Your email address will not be published.