யாழில் கொரோனாவால் மீண்டும் சாவு! – சிகிச்சை பெற்ற முதியவர் உயிரிழப்பு.

கொரோனாப் பெருந்தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தில் மீண்டும் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தல் சிகிச்சையில் இருந்தவர் உயிரிழந்தார்.

”கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அதற்குரிய தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்தார். சுகாதார அமைச்சின் சுற்றறிக்கைகளுக்கு அமைவாக அவரது உறவினர்கள் கோரும் பட்சத்தில் அவரது உடல் உரிய முறையில் பொதி செய்யப்பட்டு இறுக்கிரியைகளுக்காக உறவினர்களிடம் கையளிக்கப்படும்” – என்று யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவரே உயிரிழந்தார்.

அவருக்கு கொரோ பெருந்தொற்று ஏற்பட்டிருப்பது ஏப்ரல் 15 ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது.

அவர் கடுமையான மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும், தொற்றின் தீவிரம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடலம் மூடிச் சீல் வைக்கப்பட்டு உறவுகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதோடு சடலம் வெளியே எடுக்கப்பட்டு சடங்குகள் செய்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது.

கொரோனாப் பெருந்தொற்று பாதிப்பு, தடுப்பூசிகளைத் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் கொரோனா அறிகுறியுடன் 5 பேர் இந்த மாதம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

ஏனையவர்களுக்குத் தொடர்ந்தும் உயர்வாயு (ஒட்சிசன்) வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் கொரோனா பரிசோதனைகளை நடத்த வேண்டாம் என்று சுகாதார அமைச்சு அறிவித்திருப்பதால் மேலதிக தொற்றாளர்களை அடையாளம் காண்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.