சூடானில் போர் நிறுத்தத்தை மீறி சண்டை நீடிப்பு.

சூடான் நாட்டில் ராணுவத்தினருக்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. கடந்த 15-ந்தேதி தொடங்கிய இந்த போர் 3- வது வாரமாக நீடிக்கிறது.

சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர்கள் வெளியேறும் வகையில் 72 மணி நேர போர் நிறுத்தம் அறிவிக்கபட்டது. இதையடுத்து மற்ற நாட்டினர் சூடானில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். இரு தரப்பு ராணுவத்தினரும் போர் நிறுத்தத்தை நீட்டித்த போதிலும் அங்கு இன்னும் சண்டை நடந்து கொண்டுதான் உள்ளது.

தலைநகர் கார்ட்டூம் உள்பட பல இடங்களில் இன்னும் துப்பாக்கி சத்தம் கேட்டுக் கொண்டே தான் உள்ளது. அங்குள்ள அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் அருகே சண்டை நடந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் நிறுத்தத்தை மீறி சண்டை நீடிப்பது தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சண்டையால் பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அங்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை. உணவு பொருட்களுக்கும் கடுமையாக பஞ்சம் ஏற்பட்டு உள்ளது.

சூடானில் 3-ல் ஒரு பங்கு ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் போரில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். மருந்துகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.

இதையடுத்து சூடானில் காயம் அடைந்தர்களுக்கு உதவும் வகையில் செஞ்சிலுவை சங்கம் மூலம் 8 டன் மருந்து பொருட்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஜோர்டானில் இருந்து போர்ட் சூடானுக்கு விமானம் மூலம் இந்த மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.