வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தாழமுக்கம்.

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. அதே வேளை யாழ்ப்பாணத்திற்கு கிழக்காக வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி ஒன்றும் காணப்படுகிறது.

இவை இரண்டும் ஒன்று சேர்ந்து நாளை (08.05.2023) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அன்றைய தினமே இது புயலாக மாற்றம் பெறும். இப்புயலுக்கு ஏமன் நாட்டின் பெயரான ‘மொச்சா’ என பெயரிடப்படும்.

இந்த புயல் எதிர்வரும் 10.05.2023 அன்று அல்லது 11.05.2023 அன்று பங்களாதேஷ்க்கும் மியன்மாருக்கும் இடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் எப்பகுதிக்கும் நேரடியாக எந்த பாதிப்பும் கிடையாது.

ஆனால் இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியாவின் சில பகுதிகள், மன்னாரின் சில பகுதிகள், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகள் எதிர்வரும் 11.05.2023 வரை அவ்வப்போது கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

அத்தோடு இப்பகுதிகளின் கரையோரப் பகுதிகளில் நாளை (08.05.2023 ) முதல் காற்று மணிக்கு 30- 50 கி.மீ. என்ற வேகத்தில் வீசக் கூடும்.

அதேவேளை மன்னார் முதல் அம்பாந்தோட்டை வரையான இலங்கையின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் மக்கள் மழையால் பாதிக்கப்படக் கூடிய செயற்பாடுகளை எதிர்வரும் 12.05.2023 வரை தவிர்ப்பது சிறந்தது.

Leave A Reply

Your email address will not be published.