தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன்.

ஒரு கட்டத்தில் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு சொந்தமாக கம்பெனி ஒன்றை நடத்தி வரும் அவர், விவசாயமும் செய்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் நெப்போலியன் தனது மகன் பாதிக்கப்பட்டுள்ள அரியவகை நோய் குறித்தும். இதற்காக உலக தரத்தில் தான் கட்டிய மருத்துவமனை குறித்தும் பேசி இருந்தார்.

அதன்படி நெப்போலியனின் மகன் தனுஷ் என்பவர் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 4 வயது இருக்கும்போதே இந்த நோயை கண்டு பிடித்து விட்டார்களாம்.

ஆனால் அவர் 10 வயதுக்கு மேல் நடக்கமாட்டார் என மருத்துவர்கள் சொன்னார்களாம். அவர்கள் சொன்னபடியே 10 வயதுக்கு மேல் தனுஷால் நடக்க முடியாமல் போனதாம்.

உலகம் முழுவதும் தேடியும் இந்த நோயை குணப்படுத்த மருந்து கிடைக்கவில்லையாம். இதையடுத்து பாரம்பரிய வைத்தியம் மூலம் இதனை படிப்படியாக குணப்படுத்த முடியும் என சொன்னதும், திருநெல்வேலி அருகில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் ஒருவர் இதற்காக பாரம்பரிய வைத்தியம் செய்து வருவதை அறிந்து அங்கு தனது மகனை அழைத்து சென்றாராம் நெப்போலியன்.

அங்கு அவர்கள் நன்றாக சிகிச்சை அளித்தாலும் தங்குவதற்கு போதிய இட வசதி இல்லாததன் காரணமாக ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து அவருடைய மகனுக்கு அங்கேயே சிகிச்சை கொடுத்து வந்துள்ளார் நெப்போலியன். இந்த செய்தி மீடியாக்களில் வெளியாகி வைரலானது.

இதையடுத்து இது போல் குறைபாடுள்ள குழந்தைகளை அழைத்துக் கொண்டு இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமானோர் திருநெல்வேலிக்கு படையெடுத்துள்ளனர். இத்தனை பேர் வந்தாலும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான இடவசதி அங்கு இல்லாமல் இருந்தது. உடனே அங்கு மருத்துவமனை ஒன்றை கட்டிக்கொடுத்துள்ளார் நெப்போலியன்.

கடந்த 13ஆண்டுகளாக அந்த மருத்துவமனையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் நெப்போலியன். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் அங்கு சிகிச்சைக்காக வருகிறார்களாம். தன்னுடைய மகனுக்கு கிடைத்த நல்ல உயர்தர சிகிச்சை ஏழை குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்கிற நல் எண்ணத்தோடு, இந்த மருத்துவமனையை நடத்தி வருகிறார் நெப்போலியன். இங்கு வருபவர்களிடம் சிகிச்சைக்காக பணம் எதுவும் வாங்கப்படுவதில்லையாம்.

இதன்மூலம் அவர் தன்னுடைய மகனுக்கு மட்டுமின்றி அங்கு சிகிச்சைக்காக வரும் எல்லா குழந்தைகளுக்கும் தந்தையாக திகழ்ந்து வருகிறார். நா.முத்துக்குமார் எழுதிய “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே” என்கிற பாடல்வரிகள் நெப்போலியனுக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.