ஏழரை கோடி தங்கம் , போன்கள் பறிமுதல் : அலி சப்ரி ரஹீக்கு 75 லட்சம் அபராதம்!

3.5 கிலோ தங்கம் மற்றும் 91 ஸ்மார்ட் போன்களை கடத்தி வந்த புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் பொருட்கள் சுங்க இலாகாவால் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அவருக்கு ரூ.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் அறை வசதிகள் ஊடாக இந்த சட்டவிரோத தங்கம் மற்றும் ஸ்மார்ட் போன்கள் கொண்டு வரப்பட்டமை தொடர்பில் சுங்கத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட முறையான சுங்க விசாரணை இன்று (24) அதிகாலை 04.00 மணியளவில் நிறைவடைந்துள்ளதாக சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று (24) அதிகாலை தண்டப்பணத்தை செலுத்திவிட்டு சுங்கத் தலைமையகத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடுதலையாகி சென்றுள்ளார்.

இந்த முறையான சுங்கப் பரிசோதனையை சுங்க வருவாய் பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதி சுங்கப் பணிப்பாளர் என்.பி.பி.பிரேமரத்ன மேற்கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று காலை கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் சந்தை பெறுமதி சுமார் 74 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு 91 ஸ்மார்ட் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அதன் சந்தை பெறுமதி 4.2 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய முஸ்லீம் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நேற்று காலை 9.45 மணியளவில் துபாயிலிருந்து Fly Dubai விமானத்தின் FZ547 விமானத்தில் இலங்கையை வந்தடைந்தார்.

அப்போது விமான நிலையத்தின் விஐபி முனையத்தில் இருந்து நாட்டிற்குள் நுழைய முயன்ற அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது இக் கடத்தல் பொருட்கள் சிக்கின.

Leave A Reply

Your email address will not be published.