சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. சட்ட கோரிக்கைக்கு ஏற்ப கணக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சீமானை தவிர நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி மற்றும் 20-க்கும் மேற்பட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளை மீறி டிவிட்டரில் பதிவிடுவதாக வந்த சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று இவர்களது கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.