பிரதமர் மோடி மீது அமித் ஷாவுக்கு என்ன கோபம்…? முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சென்னையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் எதிர்காலத்தில் தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும் என பேசியிருந்தார். மேலும் வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுகவை பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

இந்த நிலையில் இன்று மேட்டூர் அணையை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர் ஒருவர் பிரதமராக வரவேண்டும் என்ற அமித் ஷா கருத்து வரவேற்பு தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி மீது உள்துறை அமித் ஷாவுக்கு என்ன கோபம் என தெரியவில்லை என குறிப்பிட்டார். அப்படி தமிழர் ஒருவர் பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைத்தால் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் ஆளுநர் தமிழிசைக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் ஜி.எஸ்.டி வரியை அதிகமாக கொடுக்கும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு குறைந்த நிதியை மட்டுமே ஒதுக்கீடு செய்வதாக குற்றச்சாட்டிய முதலமைச்சர், பாஜக ஆட்சியில் எந்த திட்டமும் தமிழ்நாட்டிற்கு வரவில்லை என்றார்.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு திறந்து வைத்து வருவதாக அதிமுக கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முதலமைச்சர், திமுக அரசு கொண்டு வந்த பல திட்டங்களை அதிமுக அரசு முடக்கியது என்றும் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட எந்த திட்டமும் முடக்கப்படவில்லை என முதலமைச்சர் பதிலளித்தார். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை அதிமுக ஆட்சியில் மருத்துவமனையாக மாற்றி அரசியல் செய்ததாகவும் பதிலடி கொடுத்தார்.

மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக அரசு ஏன் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர், திமுக ஆட்சியில் இருந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனை தேவைப்படவில்லை என்றும் எய்ம்ஸ் மருத்துவனையை அறிவித்தது திமுக அல்ல மத்திய அரசு தான் எனவும் எய்ம்ஸ் குறித்த பேச்சு உள்துறை அமைச்சராக உள்ள அமித் ஷாவுக்கு அழகல்ல என பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.