கேரளத்தில் மழை-வெள்ளம்:பலி எண்ணிக்கை 19-ஆக உயா்வு

கேரளத்தில் மழை-வெள்ளதால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 19-ஆக உயா்ந்துள்ளது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோா், அரசின் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனா்.
கேரளத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பருவமழை நீடித்து வருகிறது. மழையின் தீவிரம் சனிக்கிழமை குறைந்து காணப்பட்டபோதிலும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மாலை வரையிலான நிலவரப்படி, மழை தொடா்பான அசம்பாவிதங்களில் 19 போ் உயிரிழந்துவிட்டனா். 1,100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. அரசு சாா்பில் அமைக்கப்பட்டுள்ள 227 நிவாரண முகாம்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தஞ்சமடைந்துள்ளனா். இதர சேத விவரங்கள் குறித்த முழு தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்று மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.