உண்மையைக் கண்டறியும் பொறிமுறை சாத்தியமில்லை! – சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாகச் சுட்டிக்காட்டு.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணிகளை அபகரிப்பதிலும், சிறுபான்மையின சமூகங்களுக்குச் சொந்தமான மத வணக்கத்தலங்களைக் கைப்பற்றுவதிலும் சில அரச கட்டமைப்புக்கள் முன்நின்று செயற்பட்டுவரும் நிலையில், பாதிக்கப்பட்ட சமூகத்தின் முழுமையான பங்கேற்புடன் நியாயமான விதத்தில் உண்மையைக் கண்டறியும் செயன்முறையை முன்னெடுப்பது சாத்தியமில்லை என்று 9 சர்வதேச அமைப்புக்கள் கூட்டாகச் சுட்டிக்காட்டியுள்ளன.

அரசால் முன்மொழியப்பட்டுள்ள தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப் பேரவை, சர்வதேச பிரான்சிஸ்கன்ஸ், முன்னரங்கப் பாதுகாவலர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு, மனித உரிமைகளுக்கான சர்வதேச சம்மேளனம், இலங்கை தொடர்பான சர்வதேச செயற்பாட்டுக்குழு, இலங்கை பிரசாரம் ஆகிய 9 சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:-

“இலங்கை அரசால் முன்மொழியப்பட்டுள்ள தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் நாம் தீவிர கரிசனை கொண்டிருக்கின்றோம்.

எமது இக்கரிசனைகள் யுத்த காலத்தில் இடம்பெற்ற மீறல்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட கரிசனைகளைப் பிரதிபலிக்கும்.

இலங்கை இத்தகைய கட்டமைப்புக்களை உருவாக்கிய நீண்டகால வரலாற்றைக் கொண்டிருப்பதுடன் அவற்றில் எந்தவொரு கட்டமைப்பும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டை வழங்கவில்லை.

எனவே தற்போது தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள், கடந்த காலத் தவறுகள் மீண்டும் இடம்பெறக்கூடும் என்ற அச்சத்தைத் தோற்றுவித்துள்ளன.

இந்த ஆணைக்குழு செயற்திறன் மிக்க வகையில் இயங்குவதற்கு அவசியமான பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்துதல் மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றை இலக்காகக்கொண்டு நியாயமான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை.

அதுமாத்திரமன்றி இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளடங்கலாக சகல தரப்பினருடனும் அர்த்தமுள்ள கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவில்லை.

மேலும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் அறிக்கையின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற உள்ளகப் பொறிமுறைகள் செயற்திறனாக இயங்கமுடியாத நிலையில் இருப்பதுடன் சர்வதேச சட்டத்தின் கீழான குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முடக்குவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே இலங்கை அரசானது உண்மையைக் கண்டறிதல், விசாரணைகளை மேற்கொள்ளல், வழக்குத் தொடரல் என்பவற்றுடன் இழப்பீட்டை வழங்குவதற்கும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்துவதற்குமான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய பன்முகத்தன்மை வாய்ந்த செயற்முறையாகவே நிலைமாறுகால நீதியை அணுகவேண்டும்.

எந்தவொரு நிலைமாறுகால நீதிப் பொறிமுறையும் வெற்றிகரமாக இயங்குவதற்குப் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட சகல தரப்பினருடனான விரிவான கலந்துரையாடல் இன்றியமையாததாகும்.

இலங்கையானது கடந்த காலங்களில் பல்வேறு ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவை தோல்வியடைந்த வரலாற்றைக் கொண்டிருக்கின்றது.

எனவே உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றை வழங்குவதில் ஏற்கனவே அடையப்பட்ட தோல்வியை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளைத் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான முன்மொழிவுகளில் அரசு உள்ளடக்கவில்லை.

அதேபோன்று பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான முறையான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணி அபகரிப்பு மற்றும் சிறுபான்மையின சமூகங்களுக்குச் சொந்தமான மத வணக்கத்தலங்களைக் கைப்பற்றுதல் ஆகியவற்றை முன்னிறுத்தி சில அரச கட்டமைப்புக்கள் இயங்கி வருகின்றன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் பல தசாப்தகாலமாக வன்முறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் முகங்கொடுத்த சமூகத்தின் நம்பிக்கைமிகுந்த பங்கேற்புடன்கூடிய உண்மையைக் கண்டறியும் செயன்முறையை நியாயமான முறையில் முன்னெடுக்க முடியாது.

மேலும் எந்தவொரு உள்ளகப் பொறிமுறை மீதும் நம்பிக்கை இழந்திருக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில், அரசு பாதிக்கப்பட்ட தரப்பினரின் கரிசனைகளுக்குத் தீர்வை வழங்கக்கூடியவாறான அர்த்தமுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டும்.

எந்தவொரு பொறிமுறையும் அதன் இலக்கை அடைந்துகொள்வதற்கு, அது பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்திய பொறிமுறையாக அமைவது அவசியமாகும்.

அத்தோடு காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளிட்ட கடந்தகால உள்ளகப் பொறிமுறைகளின் தோல்வி, உள்ளகப் பொறிமுறைகளில் உரியவாறான சர்வதேசப் பங்கேற்பு உறுதிப்படுத்தப்படாமை, அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டாலும் அவை போதியளவு செயற்திறனுடன் இயங்காமை, முக்கிய மனித உரிமை மீறல் வழக்கு விசாரணைகள் முடக்கப்படல் என்பனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நிலவும் நம்பிக்கையீனத்துக்கான முக்கிய காரணங்களாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் இதுபற்றி விரிவாகக் கலந்துரையாடுவதுடன், அவர்களது உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடியவாறான நிலைமாறுகால நீதிப்பொறிமுறையினை நடைமுறைப்படுத்துமாறு நாம் அரசை வலியுறுத்துகின்றோம்.

மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எதிராக நிகழும் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக்கொண்டுவருவதன் மூலம் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்துவதில் தாம் கொண்டிருக்கும் கடப்பாட்டை அரசு வெளிப்படுத்தவேண்டும்.

அதேபோன்று சர்வதேச சட்டத்தின் கீழான குற்றங்கள் மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை முறையான வழக்கு விசாரணைகளுக்கு உட்படுத்தவேண்டும்.

அதேவேளை தற்போது இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவதுடன் எதிர்கால நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்குரிய நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை மற்றும் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கக்கூடிய நிலையிலுள்ள சர்வதேச நாடுகள் அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

அத்தோடு வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், சர்வதேச சட்டக் கோட்பாடுகளை நிலைநிறுத்தக் கூடியதும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் கரிசனைகளுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடியதுமான செயன்முறைகளுக்கே ஐ.நாவும் ஏனைய சர்வதேச நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.