கோழிக்கோட்டில் 4 பேருக்கு நிபா: ஊரடங்கு பிறப்பிப்பு!

கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸுக்கு இறந்தவர்கள் உள்பட 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 7 பஞ்சாயத்துகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஒருவரும் திங்கள்கிழமை(செப். 11) ஒருவரும் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். இறந்த இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர்.

இதற்கு நிபா வைரஸ் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட சுகாதார நிபுணர்கள், அவர்களின் மாதிரிகளை புணே ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்பிய நிலையில், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்தவர்களுடன் தொடர்பில் இருந்த இருவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, 4 பேருடன் தொடர்பில் இருந்த சுகாதாரப் பணியாளர்கள் உள்பட 168 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து கோழிக்கோடு நகரில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமையைக் கண்காணிக்க மாநில அரசுக்குத் துணையாக மத்திய நிபுணா்கள் குழுவும் கேரளத்துக்கு விரைந்துள்ளது.

மேலும், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள 7 பஞ்சாயத்துகளை தனிமைப்படுத்தி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் உள்ள மருந்து கடைகள், வருவாய் அலுவலங்கள் தவிர மற்ற கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்கள் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியூர்களுக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளை மூடவும் ஆன்லைன் மூலம் வகுப்பெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளத்தில் கடந்த 2018 மற்றும் 2021-ஆம் ஆண்டு முதன்முதலில் நிபா வைரஸ் கண்டறியப்பட்ட இடத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் இந்த முறை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவி, சுவாசக் கோளாறு முதல் உயிரிழப்பு வரை ஏற்படுத்தும் நிபா தீநுண்மி தொற்று காரணமாக கடந்த 2018 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் கோழிக்கோடு மாவட்டத்தில் பலா் உயிரிழந்தனா்.

காய்ச்சல் ஏற்பட்ட ஒரு நோயாளியிடமிருந்து, அவருக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் பரவலாம். நோயாளியின் உடல் திரவங்கள் (உமிழ் நீர், ரத்தம், சிறுநீர்) மூலம் மற்றவர்களுக்கு இந்நோய் பரவலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.