பா.ஜ.க-வுடன் கூட்டணியா? விஜய் மக்கள் இயக்கம் மறுப்பு

நடிகர் விஜய் பா.ஜ.க கூட்டணியில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், விஜய் மக்கள் இயக்கம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறிவிட்டது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க தலைவர்களை அவதூறாக விமர்சித்து வருவதால் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்று, தேசிய தலைவர்களை சந்தித்து பேசினார். தமிழ்நாட்டில் அ.தி.மு.க இல்லாமலும் பா.ஜ.க வெற்றிபெற முடியும். அ.தி.மு.க இருந்தும் கடந்த லோக்சபா தேர்தலில் நாம் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அப்படி இருக்க நாம் அ.தி.மு.க இல்லாமலேயே போட்டியிட முடியும். தற்போது பா.ஜ.க.,வின் வாக்கு வங்கியும் உயர்ந்துள்ளது. நமது தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும். பா.ஜ.க தலைமையில் கூட்டணி அமைத்தால்தான் பா.ஜ.க பெரிதாக வளரும். என்று அண்ணாமலை டெல்லி தலைமையிடம் கூறியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், மக்களவை தேர்தலுக்கு புதிய கூட்டணி அமைக்க தமிழக பா.ஜ.க முயற்சித்து வருகிறது. இதற்காக பல்வேறு கட்சி தலைவர்களிடம் பா.ஜ.க பேசி வருவதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழக பா.ஜ.க அதிக வாக்குகளை பெற அண்ணாமலை தீவிர முயற்சி எடுத்து வருகிறார். அதற்காக நடிகர் விஜயின் ஆதரவைப் பெற பா.ஜ.க முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களாக அரசியலில் நுழைய தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது முதல், அடுத்த நகர்வுகள் அவ்வப்போது எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தலைவர்களின் பிறந்த நாளுக்கு, அவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பது, பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக கல்வி உதவித் தொகை வழங்குவது, இரவு பாடசாலை, சட்ட உதவி மையம் என தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முக்கிய கட்சியான அ.தி.மு.க வெளியேறியுள்ளதால், தமிழக பா.ஜ.க.,வுக்கு வெளியில் இருந்து நடிகர் விஜயின் ஆதரவைப் பெற அண்ணாமலை முயற்சிப்பதாக தகவல் வெளியாகியது.

இதனை விஜய் மக்கள் இயக்கம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள செய்தியில், ”விஜய் பெயரை இரண்டு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் எள்ளளவும் அறமற்ற பொய்யான செய்தி. நடிகர் விஜயின் பெயரை உள்நோக்கத்தோடு அவரது அரசியல் நிலைப்பாடு என்று தொடர்புபடுத்தி துளியும் உண்மையில்லாத தகவல்கள் வெளியாகும் செய்திக்கு மறுப்பை தெரிவிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.